தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்தவர்களில் ஒருவர் தான் நடராஜன். இவர் கடந்த 1960களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவருக்கு தேவர் மகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு கேரக்டர் கொடுத்து அவருக்கு மரியாதை செய்தார்.
கள்ளபார்ட் நடராஜன் என அழைக்கப்படும் இவர் பெயரை சொன்னதும் எப்போதும் பலருக்கும் ஞாபகம் வருவது ’வண்ணக்கிளி’ திரைப்படத்தில் ’சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு’ என்ற பாடலில் செம்மையாக டப்பாங்குத்து நடனம் ஆடியவர் என்று தான். அதே போல், குமுதம் திரைப்படத்தில் ’மாமா மாமா மாமா’ என்ற பாடலுக்கும் கள்ளபார்ட் நடராஜன் டப்பாங்குத்து ஆட்டம் ஆடி இருப்பார்.
பெரிய கோவில் என்ற திரைப்படத்தில் கள்ளபார்ட் நடராஜன் கதாநாயகனாக நடித்துள்ளதாகவும் ’நாகமலை அழகே’ என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த படங்களின் பிரிண்ட்கள் தற்போது இல்லை. தெய்வப்பிறவி படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார். அவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்றால் அது மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி. அதன்பின் கண்கண்ட தெய்வம், கல்லும் கனியாகும் போன்ற படங்கள் தான். அவர் எம்ஜிஆர் நடித்த ஒளிவிளக்கு திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். இவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மீண்டும் அவர் எம்ஜிஆர் நடித்த சங்கே முழங்கு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரை மீண்டும் திரைக்கு கொண்டு வந்தவர் கமல்ஹாசன் என்றால் அது மிகை ஆகாது. கமல்ஹாசன், சிவாஜி கணேசன் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் ரேவதி அப்பாவாக அவர் நடித்திருப்பார். ரேவதி திருமணம் திடீரென நின்று போன போது அவருக்கு வேறு மாப்பிள்ளையை கமலஹாசன் ஏற்பாடு செய்த போது கள்ளபார்ட் நடராஜன் பேசும் வசனம் உணர்ச்சிவசமாக இருக்கும். அந்த வசனத்திற்கு பிறகு கமலஹாசன் தானே ரேவதியை திருமணம் செய்ய முன்வருவார்.
கள்ளபார்ட் என்றால் நாடகத்தில் திருடன் வேடத்தில் நடிப்பவர்களை தான் அழைப்பார்கள். ஏராளமான நாடகங்களில் திருடன் வேடத்தில் நடித்ததால் நடராஜனுக்கு கள்ளபார்ட் நடராஜன் என்ற பெயரும் ஏற்பட்டது. அந்த பெயரிலேயே அவர் திரைப்படங்களில் நடித்தார். கள்ளபார்ட் நடராஜன் கடந்த 1996 ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரை உலகிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.
கமல்ஹாசன் உடன் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’, ரஜினியின் ’தனிக்காட்டு ராஜா’ சிவாஜி எம்ஜிஆர் உடன் பல படங்கள் என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்த கள்ளப்பார்ட் நடராஜன் இன்றும் அந்த கால ரசிகர்கள் மனதில் குடியிருக்கிறார்.