இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா.. வியக்க வைத்த எம்.ஜி.ஆரின் மன உறுதி..

By John A

Published:

வறுமையால் மூன்று வேளை சாப்பாட்டுக்காக நாடகத்தில் நடித்து பின் அங்கிருந்தே சினிமாவில் வாய்ப்புத் தேடி துணை நடிகராக நடித்து பின் மக்கள் போற்றும் மாபெரும் தலைவனாக உருவாகி தமிழகத்தையே ஆண்டவர் தான் எம்.ஜி.ஆர். இன்றும் அதிகமுகவின் தொண்டன் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் பூஜிக்கப்படும் கடவுளாகவும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமான எம்.ஜி.ஆரின் இளமைக் காலங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதாக இருந்திருக்கிறது.

பால்ய வயதிலேயே தந்தையைப் பிரிந்து தந்தையின் பாசமே தெரியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்குக் கடவுள் என்றால் அவரது அம்மா சத்யபாமாவும், அண்ணன் சக்கரபாணியும் தான். தந்தை ஸ்தானத்தில் சக்கரபாணி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் தனது முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் போது அவருக்கு வயது 40-க்கும் அதிகம். ஆனால் அந்த வயதிலும் அப்போதுள்ள இளம் ஹீரோக்களுக்கு சவால் விட்டு நடித்து சினிமாவில் பெரும் புகழ் பெற்று மன்னாதி மன்னனாகத் திகழ்ந்தார். தான் பட்ட கஷ்டம் சினிமாத் துறையில் யாரும் படக்கூடாது என்பதற்காக உடன் நடித்த நடிகர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் அள்ளி அள்ளி வழங்கினார்.

எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு தொண்டையில் உள்ள பிரச்சினை காரணமாக சரியாக வசனம் உச்சரிக்க முடியாமல் போனாலும் அந்த நிலைமையிலும் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார். இதை அனைவருமே ஒப்புக் கொள்வர். சிறு வயதில் தான் பட்ட அவமானங்களும், கஷ்டங்களும் எம்.ஜி.ஆரின் மனதில் உரமாக விழுந்தன. அந்த உரங்களினால் எழுந்த விதைகள் அவர் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்த போது ஆலமரமாக வளர்ந்து அனைவருக்கும் நிழல் தரும் அடைக்கலமாக மாறியது.

இந்தப் படத்துல ரஜினி நடிச்சிருந்தா எப்படி இருக்கும்? தட்டித் தூக்கி ஹிட் கொடுத்த கேப்டன்..!

அஇஅதிமுகவைத் துவக்கி கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து வரலாற்றில் இமாலய சாதனையை நிகழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பல கோடி ஏழைகள் வீட்டில் விளக்கேற்றி அணையா விளக்காகத் திகழ்ந்தார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை தூசாக மதித்து முன்னேறிச் சென்றுகொண்டே இருந்த வள்ளல் அவர்.

ஒருமுறை நிருபர் ஒருவர் “எதிர்ப்புகளைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றீர்கள்?” என்று கேட்ட பொழுது, அதற்கு எம்.ஜி.ஆர் அளித்த பதில் .“என் வளர்ச்சியாலோ, எனக்குக் கிடைக்கிற ஆதரவாலோ அல்லது என்னையும் அறியாமல் நான் செய்கிற தவறுகளாலோ இன்று எனக்கு எதிர்ப்புகள் இருக்கலாம்.
ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலேயே,
பல துன்பங்களையும், துயரங்களையும் தாங்கி, பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான்.
அதை எண்ணிப் பார்க்கும் போது, இந்தத் தாக்குதல்களும், எதிர்ப்பும் எனக்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிறது“ என்றாராம் இந்த பொன்மனச் செம்மல்.