இந்த விஷயத்துல ஒண்ணா சேர்ந்த அமீர், தங்கர் பச்சான்..நல்லது நடந்தா சரி..!

By John A

Published:

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி தற்போது பொங்கல் விழாக்களை முன்னிட்டு தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து களத்தில் இறங்கும் காளைகளை அடக்க காளையர்கள் தங்களது வீரத்தைக் காட்டி வருகின்றனர்.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் விளையாடும் இந்த வீர விளையாட்டைக் கண்டு வெளிநாட்டவர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். மேலும் தமிழர்களின் வீரத்தைக் கேள்விப்பட்டு மெய்சிலிர்க்கின்றனர். இத்தகைய ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு வழக்கமாக கார், பைக் போன்ற பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதே போல் தான் வழங்கப்பட்டது.

ஆனால் வெற்றி பெற்ற வீரர்களோ எங்களுக்கு கார், பைக் எல்லாம் வேண்டாம் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசுப் பணிக்கு முன்னுரிமை வழங்கப்படுவது நடைமுறை. அதே நடைமுறையை ஜல்லிக்கட்டுப் போட்டிக்கும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதே கோரிக்கைக்கு இயக்குநர் அமீரும், தங்கர்பச்சானும் ஆதரவு அளித்துள்ளனர். தங்கர் பச்சான் தனது அறிக்கையில் கூறியதாவது, “எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தனியார் வழங்கும் அண்டா,குண்டா,நாற்காலி, மிதிவண்டி ,பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பரிசுகளை வழங்கி வருவது நடைமுறையில் இன்னும் உள்ளதை நாம் காண்கிறோம்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் பரிசாக கார் தரப்படுகின்றது. தமிழக அரசு மனது வைத்தால் பரிசு பெறும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவதுபோல் கோடிக்கணக்கில் பரிசுகளைத் இவ்வாண்டிலிருந்தே அறிவிக்கலாம். நம் மரபு விளையாட்டுக்கள் அத்தனையும் அழிந்து கொண்டிரும் நிலையில் இவ்வீரர்கள் இருக்கும் வரைத்தான் ஜல்லிக்கட்டு மாடுகளும் இருக்கும்!

வீரர்களுக்கு உழவுத் தொழில் தொடர்பான நடவு, களை, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பான், அறுவடைக்கருவிகள், மாடுகள் தந்தால் அவைகளை பயன்படுத்தியும், வாடகைகளுக்கு விட்டும் பயன் அடைவார்கள். பொருளாதார முன்னேற்றத்தை அவர்களே அடையும் பொழுது கார் வாங்குவது என்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும். நாம் அனைவரும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை அடையலாம்!

எனவே அவர்களின் நலன் தமிழ் பண்பாட்டின் நலன் கருத்திற்கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது அவ்வீரர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான இது போன்ற பரிசினைத் தந்து தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.“ என்றார்.

அஜீத், விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநர் எழில்… இதெல்லாம் இவர் படங்களா?

மேலும் அமீரும், “ திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்

புல்லாளே ஆய மகள்..”

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தை உருவாக்கியவர் இவரா..? தந்தையாகவும், ஆசானாகவும் விளங்கிய பெரியவர்!

மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

‘தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!’ என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என்று எழுதியுள்ளார்.