பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் வாழை. நிகிலா விமல், கலையரசன், ராகுல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பயோகிராபியை சற்று கமர்ஷியலுடன் கலந்து சினிமாவாக எடுத்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் படங்களாக மாரி செல்வராஜ் திரைப்படங்கள் உள்ளது. தான் சிறிய வயதில் அனுபவித்த அது போன்றதொரு சம்பவங்களை கதைக் கருவாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இந்தத் திரைப்படத்தினை வெற்றிமாறன், நெல்சன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் பார்த்து மாரி செல்வராஜை உச்சி நுகர்ந்து பாராட்டினர். அந்த வகையில் இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர் மணிரத்னமும் வாழை படத்தைப் பார்த்து மாரி செல்வராஜைப் பாராட்டியிருக்கிறார்.
அதில் “மாரி செல்வராஜைப் பார்த்து எனக்குப் பொறாமையாகவும், பெருமையாகவும் இருக்கிறது. எப்படி இந்தப் படத்தில் இத்தனை கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்திருக்கின்றனர்.
மாரி செல்வராஜ் ஒரு சிறப்பான இயக்குநர். தமிழ் சினிமா உலகிற்கு ஒரு ஓங்கிய குரலாக விளங்குகிறார். மற்ற படங்களைப் போல வாழை படத்திலும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கிறது.” என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார் மணிரத்னம்.
தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அவர்கள் அனுபவித்து வந்த இன்னல்களை காட்சிப் படுத்தி அவர்களின் சார்பாகவும், அடக்கு முறைக்கு எதிரான குரலாகவும் ஒலிக்கிறது பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் படங்கள். அந்த வகையில் வாழை படமும் அவரது பயோகிராபியாக இருப்பதால் நிச்சயம் அந்த அரசியலைப் பேசும். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 23-அன்று திரைக்கு வருகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன், நவி ஸ்டுடியோஸ், பார்மர்ஸ் மாஸ்டர்பிளான் அசோசியேஷன் ஆகியவை இணைந்து இப்படத்தினைத் தயாரித்துள்ளது. நெல்லை மண்ணைக் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.