பக்திப் படத்துல வந்த ஐட்டம் சாங்.. பாலச்சந்தர் செய்த திருத்தத்தால் எஸ்.பி.முத்துராமனுக்குக் கிடைத்த வாழ்நாள் கௌரவம்

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100 வது திரைப்படமாக வெளிவந்த படம் தான் ஸ்ரீராகவேந்திரர். மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் ஸ்ரீராகவேந்திரராக நடித்தார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் கே.பாலச்சந்தரின் சொந்தத் திரைப்படம் ஆகும். ரஜினியுடன் லட்சுமி, ஜனகராஜ், டெல்லிகணேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியினி ஆஸ்தான இயக்குநரான எஸ்.பி.முத்துராமன் இந்தத்திரைப்படத்தினை இயக்கினார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் கே.பாலச்சந்தர் இந்தப் படத்தில் லாப நஷ்டம் முக்கியம் அல்ல. படத்தை எவ்வளவு தூய்மையாக எடுக்கிறீர்களோ அவ்வளவு நல்லது என்ற வேண்டுகோளுடன் படத்தினை இயக்கும் பணியை வழங்கியிருக்கிறார் பாலச்சந்தர். கே.பாலச்சந்தரின் வேண்டுகோளுக்கிணங்க எஸ்-பி.முத்துராமன் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

வாராயோ வெண்ணிலாவே.., புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான்.., காந்தக் குரலால் தமிழ் சினிமாவைக் கிறங்கடித்த குரலரசி பி.லீலா…

எப்போதும் குறித்த நேரத்தில் படத்தினை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வைக்காமல் லாபத்தைக் கொடுக்கும் எஸ்.பி.முத்துராமன் கே.பாலச்சந்தர் சொன்னது போல் இந்தப் படத்தையும் சொன்ன தேதியில் முடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தைப்போட்டுப் பார்த்த பாலச்சந்தருக்கு திருப்தி. ஆனாலும் ஒரு பெரிய குறை. அது என்னவெனில் ஒரு பெரிய மகானின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் வருகிறதே என்று.

அந்தப் பாடல் முஸ்லீம் மன்னரான சத்யராஜ், நடனப் பெண்களுடன் ஆடுவதுபோல் அமைந்திருக்கும். இந்தப் பாடல் படத்தின் வியாபாரத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் சேர்க்கப்பட்டிருப்பதை கே.பாலச்சந்தர் அறிந்திருந்தாலும் எஸ்.பி. முத்துராமனிடம் இது புனிதமான படம். எனவே இந்தப் பாடல் வேண்டாம் என்று கூற எடிட்டிங்கில் அதனைத் தூக்கியிருக்கிறார்கள். இதனையடுத்து அந்தப் படம் இறுதி பிரிண்ட் போடப்பட்டு படம் வெளியானது.

படத்தினைப் பார்த்தவர்கள் அதில் ரஜினியைப் பார்க்கவில்லை. மாறாக ஸ்ரீராகவேந்திரராகவே ரஜினியைப் பாவித்தார்கள். அந்த அளவிற்கு ரஜினியின் நடிப்பும், எஸ்.பி.முத்துராமனின் இயக்கமும் ஒருசேர படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும். இதனையடுத்து இந்தப் படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் ஸ்ரீராகவேந்திரர் புகழ் பெரிதும் பரவியது. பல வீடுகளில் வழிபடத் தொடங்கினர்.
மேலும் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் எந்த விழாவாக இருந்தாலும் முதலில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை அழைத்து அவரை கௌரவிக்கும் பழக்கம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்தது தன் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரும் கொடுப்பினை என்று மனதாரப் பேசியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

அன்று கே.பாலச்சந்தர் மட்டும் அந்த திருத்தத்தைச் சொல்லவில்லை என்றால் படம் வேறு கோணத்தில் சென்றிருக்கும். எஸ்.பி.முத்துராமனுக்கும் இப்படி ஓர் புகழ் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் உங்களுக்காக...