’ஒரு தலை ராகம்’ திரைப்படம் என்பது பல இளைய தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்த படம் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக டி ராஜேந்தர் இந்த படத்தின் மூலம் தான் அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களை பின்னாளில் கொடுக்கவும் செய்திருந்தார்.
மேலும் இந்த படத்தின் மூலம் தான் சங்கர், ரூபா, ரவீந்தர், சந்திரசேகர் உள்ளிட்டோர் பிரபலமானவர்கள் அந்த வகையில் இந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் காமெடி நடிகர் தியாகு. இந்த படத்தில் கண்ணன் என்ற கல்லூரி மாணவராக தியாகு நடித்த நிலையில் இந்த படம் பெற்ற வெற்றி காரணமாக நடிகர் தியாகுவிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவும் செய்தது.
ஒரு தலை ராகம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற தியாகுவின் அடுத்த படமாக அவருக்கு பாலைவனச்சோலை அமைந்திருந்தது. அந்த படத்தில் சிவா என்ற கேரக்டரில் தியாகு நடித்து அசத்தி இருப்பார்.
இதனைத் தொடர்ந்து ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் உருவான ’கல்யாண காலம்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். சுஹாசினி முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் காலையில் தொடங்கி மாலையில் முடியும் கதையம்சம் கொண்டது.
மேலும் சின்ன மருமகள், நேரம் வந்தாச்சு, பக்கத்து வீட்டு ரோஜா, இதய கோயில், உயிரே உனக்காக, ஊமை விழிகள், ஒரு இனிய உதயம், பருவராகம், வீரன் வேலுத்தம்பி, உள்பட பல படங்களில் நடித்தார். பெரும்பாலான திரைப்படங்களில் அவர் ஹீரோவுக்கு நண்பராகவும் ஒரு சில படங்களில் வில்லனாகவும், சில படங்களில் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்.
கடந்த 1980 கள் மற்றும் 90களில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், 2000 ஆம் ஆண்டுகளில் இவர் சில படங்களில் நடித்துள்ளார். 2000 ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை சில வெற்றி படங்களில் நடித்துள்ள தியாகு, அதில் குறிப்பாக சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, புலன் விசாரணை 2, சாமி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு வெளியான ’சாமி 2’ படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. நடிகராக மட்டுமின்றி இவர் பல ஆண்டுகள் திமுகவில் இருந்தார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து அவர் விலகவும் செய்தார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் வில்லன் கேரக்டரில் கலக்கிய தியாகுவின் படங்கள் என்றுமே ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடியவை.