காமெடி நடிகர் to கிறிஸ்தவ மத போதகர் : மறைந்தார் ஜுனியர் பாலையா

பழம்பெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் மகனும், தமிழில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த ஜுனியர் பாலையா இன்று அதிகாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். டி.எஸ். பாலையாவைப் பற்றி…

Junior Balaiah

பழம்பெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் மகனும், தமிழில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த ஜுனியர் பாலையா இன்று அதிகாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.

டி.எஸ். பாலையாவைப் பற்றி இன்றும் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இப்போதும் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா என்ற பாடல் இன்றும்  இணையதளங்களில் உலாவந்து கொண்டிருக்கும் பாடலாகும்.  இதில் டி.எஸ்.பாலையா காமெடி வேடத்தில் கலக்கியிருப்பார். மேலும் பழைய படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்றோருடன் காமெடி, வில்லன், குணசித்திரம் போன்ற பல்வேறு வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.

இவரது மூன்றாவது மகனான ஜுனியர் பாலையாவும் தந்தை வழியில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தூத்துக்குடி  மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரகு என்கிற ஜுனியர் பாலையா 1970-ல் வெளியான மேல்நாட்டு மருமகள் திரைப்படம் மூலமாக சினிமாவில் நுழைந்தார். ஆனால் இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே இவரது தந்தை டி.எஸ். பாலையா மரணமடைந்தார்.

ஹிட் பட இயக்குநர் வாழ்வில் வீசிய புயல் : படுக்கையில் மனைவி.. துரித நடவடிக்கை எடுத்த அரசு

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் தலைகாட்டத் தொடங்கினார். இவரது நடிப்பில் உருவான கரகாட்டக் காரன் வாழைப்பழ காமெடி இன்றும் டிரெண்டிங்கில் இருக்கும் காட்சி ஆகும். கோபுர வாசலிலே, சாட்டை, கும்கி, நேர்கொண்ட பார்வை, தனி ஒருவன், சுந்தர காண்டம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட  படங்களில் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் சித்தி, சின்னபாப்பா-பெரியபாப்பா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். பின்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மதப் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை (நவ.2) சென்னை வளசரவாக்கத்தில்  உள்ள தனது வீட்டில் ஜுனியர் பாலையா மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 70. இவரது மறைவையொட்டி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கலைஞர்கள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.