எண்பதுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் இசைஞானி இளையராஜாதான் எண்பதுகளில் பல பாடல்களை ஹிட் கொடுத்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
எண்பதுகளில் பிஸியான இளையராஜாவின் தேதிகள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அதனால் இளையராஜாவுக்கு அடுத்ததாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நாடுவது சில குறிப்பிட்ட இசையமைப்பாளர்களைத்தான், அதில் இளையராஜாவின் இசையுடன் மட்டுமே படம் இயக்கி வந்த பாரதிராஜா முதன் முறையாக தனது வேதம் புதிது படத்துக்கு தேவேந்திரனை புக் செய்தார்.
தேவேந்திரனும் தனக்கு இட்ட பணியை செவ்வனே செய்து கொடுத்தார். சந்தர்ப்ப சூழ்நிலையால் இளையராஜா இப்படத்தில் இல்லாவிட்டாலும் அவர் இல்லாத குறையை போக்கும் அளவுக்கு தேவேந்திரன் இசைச்சாதனை செய்தார்.
படத்தின் பாடல்களில் கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் இன்று வரை எவர் க்ரீன் ஹிட் பாடல், மாட்டு வண்டி பாதையிலே, புத்தம் புது ஓலை வரும், மந்திரம் சொன்னேன் வந்து விடு போன்ற அழியாத பாடல்களை கொடுத்தவர் தேவேந்திரன்.
அதன் பிறகும் மண்ணுக்குள் வைரம், ஆண்களை நம்பாதே, கனம் கோர்ட்டார் அவர்களே உள்ளிட்ட படங்களுக்கு தேவேந்திரன் இசையமைத்தார். எல்லா படங்களிலும் தேனினும் இனிய பாடல்களை கொடுத்திருக்கிறார் இவர்.
எல்லா படங்களிலுமே தேவேந்திரன் தனது தனித்துவத்தை காண்பித்திருப்பார். சில வருடத்துக்கு முன் வந்த மூணார் என்ற படத்தில் கூட ரவி தேவேந்திரன் என்ற பெயரில் இசையமைத்திருப்பார்.
சமீப காலங்களில் அவர் இசையமைக்கவில்லை.
எண்பதுகளில் இருந்த இனிமையான இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.