சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க தயங்கிய ஒரு இளம் பெண், பிற்காலத்தில் இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்தது மட்டுமன்றி, தமிழக அரசியலில் ஒரு சக்திவாய்ந்த தலைவராகவும் உருவெடுத்தார். அவர்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
நடன அரங்கேற்றத்தில் தொடங்கிய சினிமா வாய்ப்பு
1960 ஆம் ஆண்டு, மே மாதம் மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவாஜி கணேசன், ஜெயலலிதாவின் திறமையான நடனத்தை கண்டு வியந்தார். அவர் ஜெயலலிதாவின் தாய் சந்தியாவிடம், “உங்கள் மகளுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று கூறினார். எனினும், ஆரம்பத்தில் தனது மகள் நடிகையாவதை சந்தியா விரும்பவில்லை.
கன்னடத் திரைப்படத்தில் அறிமுகம்
சினிமாவில் விருப்பமில்லாமல் இருந்தபோதிலும், திரைப்படத்துறை ஜெயலலிதாவை விட்டுவைக்கவில்லை. ஒருமுறை, தனது தாயுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது, இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர், தனது 15 வயதில் கன்னடத் திரைப்படமான ‘சின்னட கொம்பே’ (Chinndada Gombee) மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 140-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், முத்துராமன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஜெயலலிதா, 1965 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகத் திகழ்ந்தார்.
சோ ராமசாமியுடன் நட்பு
நடிகர் சோ ராமசாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான நட்பு, இருவரும் இணைந்து நடித்த ஒரு நாடகத்தில் தொடங்கியது. ஜெயலலிதா ஒரு பிரெஞ்சு பெண்ணாக நடித்த ஆங்கில நாடகத்தில், சோ அவருக்கு வில்லனாக நடித்தார். அந்த காலத்தில் தொடங்கிய நட்பு, பின்னாளில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் சோ ஒரு முக்கிய ஆலோசகராகவும், விமர்சகராகவும் செயல்பட வழிவகுத்தது. இந்த நட்பு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
