கேப்டன் விஜயகாந்த் – இப்ராஹிம் இராவுத்தர் நட்பை சினிமா உலகம் மட்டுமல்லாது அனைவரும் அறிவர். சிறந்த நண்பர்களாக விளங்கிய இவர்கள் தொழிலிலும் ஒன்றாக இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். சினிமாவில் எல்லோருக்கும் சில நேரம் சறுக்கல்கள் வரும். அந்த துரதிர்ஷடம் கேப்டனையும் விடவில்லை. தொடர்ந்து தோல்விப் படங்கள். ஒன்றல்ல இரண்டல்ல 11 படங்கள். சினிமாவில் நிலைக்க கட்டாயம் அடுத்து ஒரு வெற்றியைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் விஜயகாந்த் இருந்தார். அப்போது அவரது திருமணமும் நெருங்கி வந்தது.
நண்பனுக்கு திருமணத்திற்கு முன் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு இப்ராஹிம் இராவுத்தர் எடுத்த முடிவில் தயாரிக்கப்பட்ட படம் ஒன்று கேப்டனை தமிழ் சினிமாவில் நிரந்தர கேப்டனாக்கியது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சிவா கூறும் போது, “விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 தோல்வி படங்களை கொடுத்தார். அந்த நேரத்தில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் 11 தோல்விப்படங்கள் அமைந்ததால் திருமணத்திற்கு முன்பு ஒரு பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் முடிவு செய்தார். அப்போது உருவானது தான் புலன் விசாரணை.
ஆர்,கே.செல்வமணி இயக்குனராக அறிமுகமான இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து படத்தை பார்த்த இப்ராஹிம் ராவுத்தருக்கு படம் திருப்தியாக இருந்தது. ஆனாலும் இன்றைய ட்ரெண்டுக்கு கொஞ்சம் படத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும். எனவே மேலும் சில காட்சிகளை ஷூட் செய்யுங்கள் என்று படத்தில் பல திருத்தங்களை சொன்னார். இதற்காக பல லட்சங்களை செலவும் செய்தார்.
இதற்கு இயக்குனர் ஆர்.கே. செல்வமணியும் ஒத்துழைப்புக் கொடுக்க புலன் விசாரணை படத்தின் க்ளைமேக்ஸுல் விஜயகாந்த் – சரத்குமார் சண்டை காட்சி வித்தியாசமாக படமாக்கப்பட்டது. ஜனவரி 30-ல் விஜயகாந்த் திருமணம். பொங்கல் தினத்தில் வெளியான புலன் விசாரணை படம் பிளாக்பாஸ்டர் வெற்றியை பெற்றது என்று கூறியுள்ளார்.
பூந்தோட்ட காவல்காரன் படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து அதன்பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 11 படங்கள் தோல்விப்படங்களாக அமைந்த நிலையில், 1990 பொங்கல் ரிலீசாக அமைந்த புலன் விசாரணை படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.