தமிழ் திரையுலகில் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் பாரதிராஜா, கிராமிய கதைகளை திரைக்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் படைப்பாளி ஆவார். அவர் இன்று நம்மை விட்டு மறைந்தாலும், இந்த உலகம் இருக்கும் வரை அவர் படைத்த காவியங்கள் அவரது புகழை எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும்.
பாரதிராஜாவின் திரைப்படங்களில் இருக்கும் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், அவரது பெரும்பாலான படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானதாகப் படைக்கப்பட்டிருக்கும். படத்தின் கதையும் இயக்கமும் எவ்வளவு பேசப்படுகிறதோ, அதே அளவுக்கு அந்தப் படங்களில் வரும் பெண் பாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.
அவரது அறிமுகத் திரைப்படமான ’16 வயதினிலே’ ஒட்டுமொத்த படமும் ‘மயிலு’ என்ற பெண் கதாபாத்திரத்தை சுற்றித்தான் நகரும். கதாநாயகி மட்டுமல்லாது, அவளது தாய் கதாபாத்திரமும் கூட பல காட்சிகளை ஆக்கிரமித்திருக்கும். அதேபோல், பெண் சிசுக்கொலைக்கு எதிராகவும், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அவலங்களை உலுக்கி காட்டும் விதமாகவும் தனது தாயின் பெயரிலேயே ‘கருத்தம்மா’ என்ற திரைப்படத்தை எடுத்தார். ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தால் பொதுவாக ஒருவரே பேசப்படுவார், ஆனால் இப்படத்தில் இருவருக்குமே சம முக்கியத்துவம் தந்து கிராமத்து நாயகிகளின் பெருமையைப் பேச வைத்திருப்பார். பெண் பிள்ளையாக பிறந்தபோது ஒடுக்கப்பட்டு, கடைசி காலத்தில் அந்த பெண் வீட்டில் மரியாதையுடன் வாழும் பல தகப்பன்களின் மனக்குரலாக ‘கருத்தம்மா’ படம் ஒலித்தது.
இதுமட்டுமன்றி, ‘மண் வாசனை’ திரைப்படத்தில் ரேவதியின் துடிப்பான கதாபாத்திரமும், அவரது கண் அசைவுகளும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. அண்ணன்-தங்கை பாசத்தை ஆழமாக சொன்ன ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் ராதிகா இல்லாமல் கதையே நகராது. ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மையக்கருவே ராதிகா என்பது போலத்தான் கதையை அமைத்திருப்பார். ‘முதல் மரியாதை’ படத்தில் வடிவுக்கரசியின் எதிர்மறையான, கடினமான வசனங்கள் கொண்ட நடிப்பு அசாத்தியமானது. இதே படத்தில் ராதாவின் அழுத்தமான கேரக்டர், ரஞ்சனியின் அறிமுகமும் குறிப்பிடத்தக்கது. மேலும், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் சில்க் சுமிதாவின் கதாபாத்திரம், ‘அந்திமந்தாரை’, ‘வேதம் புதிது’ ஆகிய படங்கள் அனைத்துமே பாரதிராஜாவின் வலிமையான பெண் ஆளுமைகளுக்குச் சிறந்த உதாரணங்களாகும்.
தன்னுடைய முதல் படமான ’16 வயதினிலே’ குறித்து ஒரு நேர்காணலில் பேசிய பாரதிராஜா, அந்தப் படம் ஓடுமா என்று பலரும் சந்தேகப்பட்டதாக கூறினார். ஆனால், தன் மனநிறைவுக்காக அந்த படத்தை எடுத்ததாகவும், ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் கிராமத்திற்கு சென்று ஆடு, மாடு மேய்த்துக்கொள்ளலாம் என்று நினைத்ததாகவும் பகிர்ந்துகொண்டார். ஆனால், படம் வெளியான முதல் நாளே மக்கள் கொண்டாடி தீர்த்தனர். இயக்குநர் பாலச்சந்தர் அவர்களே முதன்முதலாக படத்தைப் பார்த்து பாராட்டியதாக பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் வல்லவரான அவர், நடிகர்களின் இயற்பெயரை மாற்றித் திரைப்பெயர் சூட்டுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குறிப்பாக, பாரதிராஜாவுக்கு ‘ர’ வரிசையில் தொடங்கும் பெயர்கள் மீது தனிப்பட்ட விருப்பம் இருந்ததாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுவர். இதனால் அவர் அறிமுகப்படுத்திய பல நடிகைகளுக்கு ‘ர’ வரிசையிலேயே பெயர் வைப்பதை ஒரு ஃபார்முலாவாக வைத்திருந்தார். ‘கிழக்கே போகும் ரயில்’ மூலம் அறிமுகமான ராதிகா, ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதா, ‘புதிய வார்ப்புகள்’ ரதி, ‘கடலோர கவிதைகள்’ ரேகா, ‘மண் வாசனை’ படத்தில் ஆஷா என்ற பெயரை ‘ரேவதி’ என்றும், ‘முதல் மரியாதை’ படத்தில் சாஷாவின் பெயரை ‘ரஞ்சனி’ என்றும் மாற்றினார். மேலும் ‘நாடோடி தென்றல்’ ரஞ்சிதா, ‘என்னுயிர் தோழன்’ ரமா என பலருக்கு ‘ர’ வரிசையில் பெயர் சூட்டினார். ‘தாஜ்மஹால்’ படத்தில் நடித்த ரியாசென்னுக்கு இயற்கையாகவே ‘ர’ வரிசையில் பெயர் அமைந்தது.
இதில் ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் அறிமுகமான சுகன்யாவுக்கு மட்டும் அவரது இயற்பெயரை மாற்றாமல் அப்படியே வைத்தார். அதன் பிறகு மீண்டும் ‘ர’ வரிசை வழக்கத்தை தொடர்ந்த அவர், ‘கண்களால் கைது செய்’ படத்தில் பிரியாமணியின் பெயரையும் மாற்றவில்லை. இது குறித்து ஒரு மேடையில் பேசிய பாரதிராஜா, “பிரியாமணிக்கு மட்டும் நான் பெயர் மாற்றவில்லை; அடுத்த வீட்டு பெண்ணுக்கு நாம் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் அதை விட்டுவிட்டேன்” என்றார். ரசிகர்கள் எளிதில் உச்சரித்து, மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற யுத்தியோடு அவர் மாற்றிய பெயர்கள், அந்த நடிகைகளுக்குப் புதிய அடையாளத்தையும், அதிர்ஷ்டத்தையும் தந்து வரலாற்றில் நிலைத்து நிற்க செய்துவிட்டன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

