இயக்குனர் இமயம் என்று தமிழ்த்திரை உலகில் அழைக்கப்படும் பாரதிராஜா நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மகன் மனோஜ் காலமானதைத் தொடர்ந்து உடல் நலக்குறைவால் இருந்தார் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முத்திரை பதித்த படங்கள் குறித்து பார்ப்போம்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் என முத்திரைப் பதிக்கும் படங்களை இயக்கினார். தனது உதவியாளர் கே.பாக்கியராஜின் நடிப்பில், தனது தயாரிப்பில் புதிய வார்ப்புகள் படத்தை இயக்கினார்.
இன்னொரு உதவியாளரான கே.விஜயன், ராதிகா நடிப்பில் நிறம் மாறாதப் பூக்கள் படத்தை இயக்கினார். இதில் கே.விஜயனுக்கு அவரே டப்பிங் பேசி இருந்தார். அடுத்து கல்லுக்குள் ஈரம் படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மீண்டும் தனது உதவியாளர் மணிவண்ணன் சொன்ன கதையான அலைகள் ஓய்வதில்லை படத்தைத் தனது நண்பரும், இளையராஜாவின் சகோதரருமான பாஸ்கர் தயாரிப்பில் இயக்கினார்.
அந்தப் படத்தில் கார்த்திக் நாயகன், ராதா நாயகி, தியாகராஜன் வில்லன் என அறிமுகமானார்கள். மேலும் டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, மண் வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம்புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல், கேப்டன் மகள், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்ச் செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ்ப்படங்களை இயக்கினார். இத்துடன் தெலுங்கு, இந்திப் படங்கள் உள்பட சுமார் 44 படங்களை இயக்கியுள்ளார்.
கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமான பாரதிராஜா அதன் பின் நிழல்கள், தாவணிக்கனவுகள், இதயம், தந்து விட்டேன் என்னை, ஆயுத எழுத்து, ரெட்டைச்சுழி, பாண்டிய நாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படைவீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டு பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் ஆகிய 20 படங்களில் நடித்துள்ளார்.
கே.பாக்கியராஜ், ராதிகா, மணிவண்ணன், நிழல்கள் ரவி, நெப்போலியன், அருணா, விஜயசாந்தி, உஷா, கவுண்டமணி, கார்த்திக், ராதா, தியாகராஜன், ரேவதி உள்ளிட்ட பலரை திரை உலகில் அறிமுகம் செய்தார். மகன் மனோஜ் கே.பாரதியைத் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தை இயக்கி தயாரித்தார்.
அல்லி அர்ஜூனா படத்தையும் மகனுக்காக தயாரித்தார். இவரது சினிமா பங்களிப்புக்குக் கிடைத்த விருதுகள் ஏராளம். அதைப் பட்டியலிட்டால், நீண்ட தொகுப்பாக இருக்கும். கிராமத்து மண்ணில் இருந்து கிளம்பி தமிழ்சினிமா உலகையே புரட்டிப் போட்ட புயல் போன்றவர் பாரதிராஜா. தன் கடைசி காலம் வரை சினிமாவில் ஒரு நடிகராக இயங்கி வந்தார். இப்போது மரணம் அவருக்கு ஓய்வளித்துள்ளது. இவர் தன் கலையால் என்றும் வாழ்வார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


