பாரதிராஜாவின் படம் என்றாலே அதில் காதல் கண்டிப்பாக இருக்கும் என்பது தெரிந்ததே. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்கு பிறகு அவர் பல காதல் படங்களை எடுத்தார். அவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றி பெற்றது.
அந்த வகையில் பாரதிராஜாவின் ‘காதல் ஓவியம்’ என்ற திரைப்படம் உண்மையாகவே காதலை மையப்படுத்தி வரைந்த ஓவியமாகவே இருந்தது. ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ராதாவை அறிமுகம் செய்த பாரதிராஜா ‘காதல் ஓவியம்’ திரைப்படத்தில் அவரையே நாயகி ஆக்கினார். கண்ணன் என்பவர் நாயகனாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு கண்ணன் என்னவானார் என்பது யாருக்கும் தெரியவில்லை. மேலும் கவுண்டமணி, ஜனகராஜ், ராதாரவி உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அவரது இசையில் உருவான 8 பாடல்களும் இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது. குறிப்பாக ‘நாதம் என் ஜீவனே’, ‘நதியிலாடும்’, ‘பூஜைக்காக வாழும்’, ‘பூவில் வண்டு’, ‘சங்கீத ஜாதி மல்லி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின.
இந்த படத்தின் கதை என்று பார்த்தால் கண் தெரியாத கண்ணன், ராதாவின் கொலுசு சத்தத்தை கேட்டு காதலிப்பார். ராதாவும் கண்ணனை காதலிப்பார். ஆனால் ராதா விதிவசத்தால் வேறொருவரை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஜனகராஜ் தான் அவருடைய கணவர்.
இந்த நிலையில் கண்ணனின் இசை கச்சேரி ஒன்றுக்கு ராதா வருவார். அவருடைய கால் கொலுசு சத்தத்தை கேட்டு தன்னுடைய காதலி வந்திருக்கிறார் என்பதை கண்ணன் அறிந்து கொள்வார். ஆனால் தான் வந்திருப்பதை தனது முன்னாள் காதலன் அறிந்து விடக்கூடாது என்பதற்காக ராதா என்னென்னமோ செய்வார். அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பாரதிராஜா செதுக்கி இருப்பார். காதல் ஓவியம் என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு காட்சியும் அவர் ஓவியம் போல் செதுக்கியிருப்பார். ஆனால் அவர் செய்த ஒரே தவறு ராதாவின் கணவர் கேரக்டருக்கு ஜனகராஜை தேர்வு செய்ததுதான்.
42 வயதில் மறைந்து போன மகா கலைஞன் சுருளிராஜன்.. ஒரே வருடத்தில் 55 படங்கள் நடிக்க முடியுமா?
படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்களில் பலர், ‘ஒரு அழகான ஓவியம் போல் இருக்கும் ராதாவுக்கு ஜனகராஜை யாராவது ஜோடியாக போடுவார்களா?’ என்று ஆதங்கப்பட்டனர். அதைக் கேட்டபோதுதான் பாரதிராஜாவுக்கு தான் செய்த தவறு புரிய வந்தது.
ஒரு நல்ல கதையை சிறப்பாக படமாக்கி, ஒரே ஒரு கேரக்டரை தவறாக தேர்வு செய்ததால் படம் தோல்வியடைந்தது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். ஒரு நாயகிக்கு காமெடி நடிகர் ஜோடியாக நடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே அவர் அந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம்.
இதனை அடுத்து அவர் பல பேட்டிகளில் ‘காதல் ஓவியம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம். ஆனால் ஜனகராஜை அந்த படத்தில் நான் நடிக்க வைத்தது தான் என்னுடைய தவறு என்று கூறியிருந்தார். இருப்பினும் ஒரு நிறைவான படத்தை எடுத்த திருப்தி எனக்கு இருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் பார்க்கும்போது, மிகவும் கஷ்டப்பட்டு கவிதை மாதிரி செதுக்கிய காட்சிகளுக்கெல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை என்பதை பார்த்து அவர் ஏமாற்றம் அடைந்தார். அப்போதே இது தோல்வி படம் எனக்கு தெரிந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
‘இந்த படம் தோல்வி அடைந்திருக்கலாம் ஆனால் இப்போதும் என் பெயரை சொல்லும் படமாக அந்த படம் இருக்கிறது, அது போதும் எனக்கு’ என இந்த படம் குறித்து பாரதிராஜா தனது கருத்தை தெரிவித்தார்.
கவுண்டமணியை ஓரங்கட்ட கமல், ரஜினி கொண்டு வந்த காமெடி நடிகர்.. இப்போது அமெரிக்காவில் செட்டில்..!
இந்த படத்தை உயிரோட்டத்துடன் கொண்டு சென்றார் என்றால் அது இசைஞானி இளையராஜாவின் பின்னணிசையால் மட்டுமே. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய பின்னணியிசை ரசிகர்களை கட்டி போட்டு இருக்கும்.