பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் நாளை டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என்றாலும் இப்பொழுதே கிட்டத்தட்ட டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் இறுதிக்கட்ட போட்டியாளர்களான விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூவரில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு பெற்றுவிட்டதாகவும் இரண்டாவது இடத்தில் விக்ரமன் மற்றும் மூன்றாவது இடத்தை ஷிவின் பெற்றதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த செய்தி உண்மை என்றால் அசீம் டைட்டில் வின்னருக்கு தகுதியானவரா என்ற வாத விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அநாகரிமாக நடந்து கொண்ட போட்டியாளர், கமல்ஹாசனால் இதுவரை இல்லாத அளவில் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் டைட்டில் வின்னரா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் அசீம் கள்ளங்கபடம் இல்லாதவர் என்றும் மனதில் உள்ளதை அவர் தெரிவித்தார் என்றும் போலியாக அவர் பிக் பாஸ் வீட்டில் நடிக்கவில்லை என்றும் பலர் அவருக்கு ஆதரவான கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். அவ்வப்போது தனது சொந்த கருத்துக்களையும் தனது கட்சியின் கருத்துக்களையும் திணித்தாலும் அவருடைய அணுகுமுறை என்பது வித்தியாசமாக இருந்தது என்பதும் இந்த இளம் வயதிலேயே அவர் பொறுமை காத்து மற்றவர்களின் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டு, எதிர்க்க வேண்டிய நேரத்தில் தைரியமாக எதிர்த்தார் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கடந்த சீசன்களில் ஆரி மற்றும் ராஜு ஆகியோர் டைட்டில் பட்டம் பெறுவார்கள் என்று முன்கூட்டியே அனைவரும் கணித்தது போலவே இந்த சீசனிலும் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்ரமன் வெற்றி பெற வேண்டும் என்று ட்விட் செய்ததன் காரணமாக விக்ரமனுக்கு திடீரென நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்துவிட்டது.
வனிதா விஜயகுமார் போன்றவர்கள் அந்த அரசியல் கட்சி தலைவரின் கருத்தை எதிர்த்து குரல் கொடுத்ததால் விக்ரமனுக்கு எதிரான கருத்துக்கள் மேலும் தீவிரம் அடைந்தது. ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு அரசியல் கட்சி தலைவர் ட்விட் செய்ய வேண்டுமா என்று சாதாரண பார்வையாளர்களும் கருத ஆரம்பித்து விட்டார்கள். இதன் காரணமாக தான் விக்ரமனுக்கு அதிக ஓட்டுக்கள் விழவில்லை என்று கூறப்படுகிறது.
விக்ரமனுக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட அந்த டுவீட்டை பார்த்த பிறகு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, அசீமுக்க்கு போட்டதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எது எப்படியோ, ஒரு நல்ல போட்டியாளர் டைட்டில் பட்டம் வெல்லவில்லை என்ற ஆதங்கம் பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அசீம் டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் இல்லை என்று கூற முடியாது என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் விஜய் டிவி தங்கள் நிறுவனத்தில் பணி வருபவர்களுக்கு மட்டுமே டைட்டில் பட்டம் தரும் என்ற குற்றச்சாட்டு இந்த சீசனிலும் உறுதி செய்யப்படுவதாக தான் கூறப்பட்டு வருகிறது. இனிவரும் சீசன்களிலாவது இதை ஒரு ரியாலிட்டி ஷோவாக மட்டும் பார்த்து இதில் அரசியல் கலக்க வேண்டாம் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.