சூப்பர் ஸ்டாடர் ரஜினியின் நடிப்பில் 1984-ல் வெளிவந்த படம் தான் நல்லவனுக்கு நல்லவன். ஏ.வி.எம் நிறுவனத்துடன் முதன் முதலாக முரட்டுக்காளை படத்தில் கைகோர்த்த ரஜினி அடுத்தடுத்து ஏவிஎம் நிறுவனத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஏ.வி.எம்., எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி ஹிட் ஆன படம் தான் நல்லவனுக்கு நல்லவன்.
ரஜினியின் ஆஸ்தான இயக்குநராக எஸ்.பி. முத்துராமன் இப்படத்தினை இயக்க இளையராஜாவின் இசையில் பாடல்கள் வழக்கம் போல் ஹிட் ஆனது. இப்படத்தின் கதை வசனம் விசு. இன்றும் கணவன்-மனைவி அன்பைக் குறிக்கும் பாடலாக உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே என்ற பாடல் சோஷியல் மீடியாக்களில் ஸ்டேட்டஸ்களில் வலம் வருகின்றன. ரஜினி அப்போது மாஸ் ஹீரோவாக வளர்ந்து வந்த நேரம் அது. எனினும் ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்தாலும் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது.
ஒரு மாதம் ஓடும் என கணித்த படம்.. 25 வாரங்கள் ஓடி சில்வர் ஜூபிளி கொண்டாடிய ‘பயணங்கள் முடிவதில்லை‘
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினியுடன், கார்த்திக், ராதிகா, துளசி, விசு போன்றோர் நடித்திருந்தனர். இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கார்திக்கும், துளசியும் ரஜினியைப் புரிந்து கொண்டு எல்லா சொத்துக்களையும் எங்களுக்குக் கொடுத்துட்டீங்க நீங்க உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்க என்று கூறுவார். உடனே ரஜினி ராதிகாவின் புகைப்படத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவார். மிக எமோஷனலாக இந்த முடிவு வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஏ.வி.எம் சரவணனிடம் போட்டுக் காட்டிய போது கிளைமேக்ஸ் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் ரஜினி ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் ரஜினி ஒரு கமர்ஷியல் ஹீரோ எனவே வில்லன்களை அடித்து இறுதியில் கார்த்திக்கை காப்பாற்றுவது போல் வேறொரு சீன் வைத்தால் படமும் கமர்ஷியலாக இருக்கும், ரஜினி ரசிகர்களை திருப்திப் படுத்துவதாக இருக்கும் என்று கூறினார்.
எஸ்.பி.முத்துராமன் ரஜினியிடம் இதைச் சொல்ல உடனே அவரும் ஒப்புக் கொண்டு மீண்டும் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி எடுத்திருக்கின்றனர். அவர் கூறியது போலவே படம் வெளியாகி பெரிய வரவேற்பினைப் பெற்றது. படமும் ஹிட் ஆனது.