முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்

By John A

Published:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் கொள்கை ரீதியாக எப்படி வாழ வேண்டும். பிறரின் கஷ்டங்களை குறிப்பால் அறிந்து அவர்கள் கேட்காமலேயே உதவி செய்யும் மனம் போன்றவற்றை எம்.ஜி.ஆரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.இப்படி அவரின் நல்ல உள்ளத்தினை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்லும்

அதே சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு தனது குடும்பத்தினருக்காகவோ அல்லது உறவினர்களுக்காகவோ பரிந்துரை செய்யும் பழக்கம் கிடையாது. இதை கடைசி பின்பற்றி வந்தார். இதற்காக முதலமைச்சராக ஒரு அறிவிப்பையே வெளியிட்டார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் செய்தார் நம் மக்கள் திலகம்.

ஐம்பதாயிரம் வேண்டாம்.. ஐந்து லட்சம் போடுங்க.. ஒரே வார்த்தையில் தேவரை மடக்கிய ஆரூர்தாஸ்

திரையுலகில் அவர் உச்ச நட்சத்திரமாக இருந்த நிலையிலும் கூட தனது அண்ணன் சக்கரபாணிக்காக தான் நடிக்கும் படங்களில் வாய்ப்புத் தர வேண்டும் என எந்த தயாரிப்பாளரையும் வற்புறுத்தியது கிடையாது. இருப்பினும் சக்கரபாணியும் ஒரு சிறந்த நடிகராகவே விளங்கினார். இதேபோல் எம்.ஜி.ஆருக்கு வாரிசுகள் இல்லாத நிலையில் தனது அண்ணன் மகன் எம்.ஜி.சி.சுகுமாருக்கும் தனது செல்வாக்கை எந்த விதத்திலும் எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது கிடையாதாம். இருப்பினும் எம்.ஜி.சி.சுகுமாரும் சில திரைப்படங்களில் நடித்தார்.

இவை எல்லாவற்றையும் விட ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவரது குடும்பத்தினர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்திற்குச் செல்ல உடனே ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில், ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை.

எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ராயத்தை அறிந்து நடக்க வேண்டும்.’ என அதிரடியாக 13.06.1986ல் நாளிதழ்களில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டு தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தகுந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்து காட்டினார்.