இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதும், பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஓர் ஆச்சரியமான சம்பவம் மற்றும் ஒரு தொடர்ச்சியான கனவுகளுக்கு பின்னரே தான் மதம் மாறியதாக அவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
துயரமும் நம்பிக்கைத் தேடலும்
திலீப் என்ற பெயருடன் இசைத்துறையிலும், இசை குழுக்களுடன் வெளிநாட்டு பயணங்களிலும் உச்சத்தில் இருந்த நிலையில்தான், திடீரென அவரது சகோதரிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. தனது தந்தை இதே வயிற்று வலியால் துடிதுடித்து இறந்ததையும், அவரை காப்பாற்ற இந்து மத சாமியார்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், முஸ்லிம் மத குருக்கள் வந்து பிரார்த்தனை செய்தும், மாந்திரீகம் செய்தும் காப்பாற்ற முடியவில்லை என்ற நினைப்பு திலீப்பை வாட்டியுள்ளது. அதேபோன்ற வலி தனது சகோதரிக்கும் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்திருந்தார்.
ஒரு அற்புதம் மற்றும் நம்பிக்கையின் விதை
இந்த சூழ்நிலையில்தான் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. ஷேக் அப்துல் காதிர் ஜிலானி சாஹிப் என்பவர் ‘பிர் காத்ரி’ என அறியப்பட்டவர் திலீப்பின் சகோதரியை காண வந்ததாகவும், அவர் செய்த பிரார்த்தனையில் அவரது சகோதரி அதிசயமாக குணமாகி எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு பிறகே, ரஹ்மானுக்கு இஸ்லாம் மீது ஒரு நம்பிக்கை வந்ததாக தெரிகிறது. தந்தையின் மரணத்திற்கு பிறகு நாத்திகராகவே மாறியிருந்த திலீப், இந்த சம்பவத்தால் இஸ்லாம் மீது நெருக்கம் காட்ட தொடங்கினார்.
கனவில் வந்த செய்தி மற்றும் குடும்பத்தின் முடிவு
இந்த நிலையில் திடீரென ஒரு நாள் திலீப்பின் கனவில் ஒரு பெரியவர் வந்து, “இஸ்லாம் மதத்துக்கு மாறு!” என்று சொன்னதாகவும், இந்த கனவு தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கனவைப் பற்றி அவர் தனது தாயாரிடம் தெரிவித்தபோது, “இது கடவுளிடமிருந்து வந்த செய்தியாகவே கருத வேண்டும், நாம் எல்லோரும் இஸ்லாமிற்கு மாறிவிடலாம்” என்று அவரது தாய் கூறியதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் அவர் தனது குடும்பத்தோடு இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் தனது பெயரையும் ஏ.ஆர்.ரஹ்மான் என மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பஞ்சதன்’ ஸ்டுடியோவுக்கான இடத்தை கூட இஸ்லாம் மத குருமார்கள்தான் தேர்வு செய்து கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெயர் மாற்றம் மற்றும் உலகளாவிய புகழ்
திலீப்பின் குடும்பத்தினர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும், பெயர் மாற்றப்பட்டதும் ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர் இசையமைத்த முதல் படமான ‘ரோஜா’ சூப்பர் ஹிட் ஆனதால், அனைவரது வாயையும் மௌனமாக்கியது. இந்தியா முழுவதும் அவரது புகழ் மிக வேகமாகப் பரவியதற்கு இஸ்லாம் மதத்திற்கு மாறியதும், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பெயர் சூட்டியதும்தான் காரணம் என்று அவர் நம்பத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆன்மிகப் பயணம், ரஹ்மானின் கலைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
