நடிகர் அஜீத்துக்கும் – இயக்குநர் சரணுக்கும் அப்படி ஓர் ஒற்றமை உண்டு. அஜீத் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர் இயக்குநர் சரண். காதல் கதையுடன், ஆக்சன் மசாலாவையும் கலந்து இவர்கள் காம்போ கொடுத்த படங்கள் அனைத்துமே ஹிட் ரகம் தான்.
காதல் மன்னனில் ஆரம்பித்த இவர்கள் பயணம் தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தது. மேலும் பரத்வாஜின் இசையும் அஜீத் பாடல்களின் வெற்றிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் அஜீத் – ஷாலினி ஜோடியின் காதலுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இயக்குநர் சரண். அமர்க்களம் படத்தின் ஷுட்டிங்கின் போது நடிப்பைத் தாண்டி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறை காட்டத் தொடங்கினார்களாம்.
அஜீத் அமர்க்களம் பட ஷுட்டிங்கின் போது சரணிடம் ‘ஷூட்டிங்க சீக்கிரம் முடிச்சிடுங்க.. இல்லனா நான் ஷாலினியை லவ் பண்ணிடுவேன்’ என சொல்லி சிரித்தாராம். இதைக் கேட்டு வெட்கப்பட்டு சிரித்திருக்கிறார் ஷாலினி. அதேபோல், அஜித்துக்கு பிறந்தநாள் வந்தபோது அவருக்காக சில பரிசு பொருட்களை வாங்கிய ஷாலினி அதை இயக்குனர் சரணிடம் கொடுத்து ‘இதை இன்று இரவு ஒரு மணிக்கு அஜித்தின் அறையில் வைத்து விடுங்கள்’ என சொல்லியிருக்கிறார். சரணும் அப்படியே அந்த பொருட்களை வைத்துவிட்டார்.
பிறந்த நாள் அன்று காலை அந்த பரிசு பொருட்களை பார்த்த அஜித் ஷாலினியின் அன்பைப் புரிந்து கொண்டார். மேலும் அவர் வாங்கிய எல்லாமே அவருக்கு பிடித்த பொருட்களாக இருந்தது. அப்போதே ஷாலினியும் தன்னை விரும்புகிறார் என்பதை அஜித் புரிந்து கொண்டாராம். இதுபற்றி இயக்குனர் சரண் கூறும் போது, “ அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு மூனாறில் நடந்தது. நானும் அஜித்தும் கொச்சின் சென்று அங்கிருந்து 3 மணி நேரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு போனோம். கொச்சினை தாண்டியபின் போன் செய்து பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவழியாக போய் சேர்ந்தேம். எங்களுக்கு முன்பே ஷாலினி அங்கே வந்துவிட்டார்.
எங்களை பார்த்ததும் ‘ஏன் எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை. அஜித்துக்கு என்னவானது என பயந்து விட்டேன்’ என அழத்துவங்கி விட்டார். அப்போதுதான் இருவரும் அவ்வளவு நெருக்கமாகி விட்டார்கள் போல என நான் புரிந்துகொண்டேன். நான் நினைத்தபடியே பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டனர்’ என அவர்களின் லவ் ஸ்டோரியைக் கூறினார் சரண்.