நடிகர் அஜித் நடிக்க இருந்த பல திரைப்படங்கள், எதிர்பாராத காரணங்களால் வேறு நடிகர்களிடம் சென்றுள்ளது. அந்த படங்களில் சில மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவற்றில் பத்து முக்கியமான படங்களை பார்க்கலாம்.
1. கோ (2011)
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ திரைப்படத்தில் முதலில் அஜித்தை கதாநாயகனாக தேர்வு செய்தனர். ஆனால் சில காரணங்களால் அவர் விலகிய நிலையில், அதன்பின் சிம்பு ஒப்பந்தமானார். பின்னர் சிம்புவும் இந்த படத்தில் இருந்து விலகியதால், இறுதியில் ஜீவா இந்த படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
2. நான் கடவுள் (2009)
பாலா இயக்கத்தில் உருவான ’நான் கடவுள்’ திரைப்படம் தேசிய விருது பெற்ற திரைப்படமாகும். இந்த படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்தார். ஆனால் பாலா மற்றும் அஜித்துக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகளால் அவர் விலகினார். இதன் பிறகு ஆர்யா இந்த படத்தில் நடித்தார், படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
3. கஜினி (2005)
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’கஜினி’ திரைப்படத்தில் முதலில் அஜித்தை நடிக்க தேர்வு செய்தனர். போட்டோஷூட் எடுத்ததோடு, சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் அஜித் படத்தில் இருந்து விலகினார். பின்னர் சூர்யா இந்த படத்தில் நடித்தார், படம் சூப்பர் ஹிட் ஆனது.
4. கில்லி (2004)
தரணி இயக்கத்தில் உருவான ’கில்லி’ திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. முதலில் இந்த கதைக்கான தேர்வாக இயக்குனர் தரணி, அஜித்தை தொடர்பு கொண்டார். ஆனால் அஜித் அந்த கதையில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக விஜய் நடித்தார், படம் மாபெரும் வெற்றி பெற்றது.
5. காக்க காக்க (2003)
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’காக்க காக்க’ திரைப்படத்திற்கான முதலில் தேர்வான நடிகர் அஜித். ஆனால் சில காரணங்களால் அவர் விலகினார். பின்னர் சூர்யா நடித்த நிலையில், படம் சூப்பர் ஹிட் ஆனது.
6. சாமி (2003)
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ’சாமி’ திரைப்படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்தார். இதற்கான ஒப்பந்தம் கூட செய்யப்பட்டது. ஆனால் திடீரென அஜித் விலகினார், பின்னர் விக்ரம் நடித்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது.
7. தூள் (2003)
தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தூள்’ திரைப்படம் முதலில் அஜித் மற்றும் விஜய்யிடம் சென்றது. ஆனால் இருவரும் இந்த படத்தில் நடிக்க விரும்பாததால், இறுதியில் விக்ரம் நடித்தார். படம் வெற்றி பெற்றது.
8. ரன் (2002)
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ’ரன்’ திரைப்படத்திற்கு முதலில் அஜித்தை தேர்வு செய்தனர். ஆனால் இந்த படத்தில் அஜித் நடிக்கவில்லை. பின்னர் மாதவன் நடித்த நிலையில், படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின் அஜித், லிங்குசாமி இயக்கிய ஜி திரைப்படத்தில் நடித்தார். படம் பெரிய தோல்வி அடைந்தது.
9. ஜெமினி (2002)
ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்து சரண் இயக்கிய ’ஜெமினி’ திரைப்படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலக, விக்ரம் நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
10. ஜீன்ஸ் (1998)
ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ’ஜீன்ஸ்’ திரைப்படம் முதலில் அஜித்தை முன்னிறுத்தி உருவாக இருந்தது. ஆனால் அஜித் நீண்ட நாள் கால்ஷீட் கேட்டதால் மறுத்துவிட்டார். அதன்பின் அப்பாஸிடம் சென்ற நிலையில் அவருடைய மேலாளர், அப்பாஸிடம் ஆலோசனை செய்யாமல் மறுப்பு தெரிவித்ததால், இறுதியில் பிரசாந்த் இந்த படத்தில் நடித்தார்.