இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?

By John A

Published:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சிறுவயது பாலகனாக ஆனந்த ஜோதி படத்தில் நடித்திருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின்னர் வாலிப வயதில் ஹீரோவாக கமல் முயற்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு பட விழாவில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தாராம். எனவே பழைய நெருக்கம் மீண்டும் தொடர்ந்ததை எண்ணி மகிழ்ந்திருக்கிறார். இந்நிலையில் கமல்ஹாசனை உச்சத்திற்குக் கொண்டு சென்ற படமான நாயகன் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி எம்.ஜி.ஆரிடம் வாழ்த்துப் பெற்று பின் அமெரிக்கா செல்லலாம் என கமல் நினைத்திருந்தார். அப்போது தனது குடும்பத்துடன் எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவரது ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பு தனது மூத்த மகள் ஸ்ருதியிடம் எம்.ஜி.ஆருக்கு எப்படி வணக்கம் வைக்க வேண்டும். எப்படிப் பேச வேண்டும் என பயிற்சி அளித்து உடன் தனது மனைவியான சரிஹாவுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ஸ்ருதி மிக சின்னக் குழந்தையாக இருந்தாராம்.

அப்போது எம்.ஜி.ஆரின் வருகைக்காக மூவரும் காத்திருக்க, அந்நேரம் எம்.ஜி.ஆர் அங்கு வந்தார். அப்போது நடந்த சம்பவங்களை கமல்ஹாசன் கூறும் போது, “ வாத்தியாரோட ராமவரம் தோட்டம் மாடி அறைக்கு வெளியே அவருக்காக காத்துட்டு இருக்கோம். அங்கே வாத்தியாரோட பெரியப் பெரிய படங்கள் மாட்டி இருப்பாங்க. அதையெல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தா ஸ்ருதி. எம்.ஜி.ஆர். பளிச்னு என்ட்ரி கொடுத்தார். நான் எழுந்து வணக்கம் சொல்றேன், ஸ்ருதி பராக் பார்த்துட்டு அப்படியே உட்கார்ந்துட்டிருக்கா.

காக்கிச் சட்டையில் கலக்கிய சூர்யா.. தளபதி விஜய்க்கு மிஸ் ஆன பவர்ஃபுல் ஹீரோ வேடம்.. எந்தப் படம் தெரியுமா?

நான் கண்ணு காட்டுறேன். கையால லேசா இடிக்கிறேன் எதுக்கும் ரெஸ்பான்ஸே இல்ல. அங்கிருந்த பெரிய எம்.ஜி.ஆர். படத்தையே ஆ…ஆ…னு பார்த்துகிட்டு உட்கார்ந்திருந்தா. சே… ப்ராக்டீஸ் பண்ணினதெல்லாம் வீணாபோச்சேனு எனக்கு பயங்கர கோபம்.

என்னையும் ஸ்ருதியையும் மாறி மாறி பார்த்த வாத்தியார்… “என்ன?” அப்படினு தலையால் சைகை செய்தார்.

“இல்ல… நிறைய சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வந்தேன்… அதான்…”னதும்.

“குழந்தைய ஒன்ணும் சொல்லாத. கொஞ்சம் இரு”ன்னு சொல்லிட்டு உள்ளே போனவர், தொப்பி கண்ணாடி எல்லாம் போட்டுட்டு திரும்பி வந்தார்.

உடனே எழுந்து ஸ்ருதி “வணக்கம் ஐயா”னு சொன்னா.

“பாத்தியா… அதான் குழந்தை. அவ வெயிட் பண்ணிட்டு இருந்தது இந்த எம்.ஜி.ஆருக்கு. இப்ப புரியுதா”ன்னார்.

“என்கூட சரிகா வந்திருந்தாங்க. நாம பேசுறது இவங்களுக்கு புரியுமானு கேட்டவர், ஜானகியம்மாவை காமிச்சு, என்னைவிட இவங்க நல்லா இந்தி பேசுவாங்கன்னு சொன்னார். சிரிச்சுகிட்டே வாழ்த்தி அனுப்பினார். ஆனால் திரும்பி வரும்போது இல்ல” என்று நெகிழ்ச்சியாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.