தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக நடிப்பவர்கள் எந்த அளவுக்கு பிரபலம் அடைகிறார்களோ, அந்த அளவுக்கு அக்கா, தங்கை உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் கூட ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைவார்கள். அந்த வகையில் பெயர் எடுத்த ஒரு நடிகை தான் சத்யகலா.
பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ’விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் அவரை கொலை செய்வதற்கு பாக்யராஜ் பல்வேறு விதங்களில் முயற்சி செய்து அவை அனைத்தும் தோல்வி அடைய கடைசியில் அவருடன் சேர்ந்து வாழும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும்.
அதே போல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ’லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ என்ற படத்தில் சிவாஜிக்கு தங்கையாகவும், ’தனிக்காட்டு ராஜா’ என்ற படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்திருப்பார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி, தான் தயாரித்த பல படங்களில் சத்யகலாவுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக சட்டம், நிரபராதி, விதி, பந்தம் உள்பட பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
நடிகை சத்யகலாவுக்கு திருப்பு முனையை கொடுத்த படம் என்றால் அது ’தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்பது தான். சிவகுமார் மற்றும் அம்பிகா ஜோடியாக நடித்த இந்த படத்தில் சத்யகலா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். முதலில் இந்த படத்தில் சத்யகலா கேரக்டரில் படாபட் ஜெயலட்சுமி நடிக்க இருந்த நிலையில் திடீரென அவர் நடிக்காமல் பின் வாங்கி விட்டதால் தான் சத்யகலாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
இயக்குனர் துரை இயக்கத்தில் உருவான தனிமரம், வாடகை வீடு உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவர் பல படங்களில் நடித்து பிரபலம் ஆனார். அதிலும் மோகன்லால், மம்மூட்டி படங்களிலும் இவர் நாயகியாக எடுத்து ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்திருந்தார்.
சிரஞ்சீவி, ராதிகா நடித்த காவாலி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் மோகன், பூர்ணிமா ஜெயராமன், சுஜாதா நடித்த ‘விதி’. தெலுங்கில் சிரஞ்சீவி, ராதிகா நடித்த வேடங்களில் தமிழில் மோகன், பூர்ணிமா ஜெயராமன் நடித்த நிலையில், சாரதா நடித்த வக்கீல் கேரக்டரில் சுஜாதா நடித்திருந்தார். தெலுங்கில் சிரஞ்சீவி மனைவியாக படாபட் ஜெயலட்சுமி நடித்த நிலையில் அந்த கேரக்டரில் தான் சத்யகலா நடித்திருந்தார்.
நடிகை சத்யகலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார். கடந்த 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் திரை உலகில் இருந்து விலகி விட்டு சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படங்களில் நடிப்பதை சத்யகலா நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.