7வது படிக்கிறப்போ ரஜினி தங்கையா என்ட்ரி.. சினிமாவுக்காக படிப்பையே தூக்கி போட்ட நடிகை கீதாவின் பின்னணி..

By Bala Siva

Published:

நடிகை கீதா பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தற்போது அம்மா, அக்கா என குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நிலையில், அவரது திரை பயணம் பற்றி தற்போது பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ’பைரவி’. இந்த படத்தை  எம். பாஸ்கர் என்பவர் இயக்கினார். இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரீப்ரியா நடித்த நிலையில் ரஜினியின் தங்கையாக கீதா நடித்தார்.

இந்த படம் தான் அவருடைய முதல் படமாக அமைந்திருந்தது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது அவர் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த படம் பெற்ற வெற்றி காரணமாக கீதாவுக்கு பல படங்களில் நடிக்கவும் அந்த சிறு வயதிலேயே வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து படிப்பையும் விட்டு விட்டார்.

’பைரவி’ படத்தை அடுத்து இரண்டாவது படமே ரஜினி, கமல் நடிப்பில் என கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’நினைத்தாலே இனிக்கும்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவர் ரிஷப்ஷனிஸ்ட் என்ற கேரக்டரில் சிறிது நேரமே வரும் காட்சியில் நடித்தார். இருப்பினும் அவர் இந்த ஒரு சில காட்சிகளால் ரசிகர்களால் கவரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிவாஜி கணேசன் நடித்த தர்மராஜா, ரஜினி நடித்த கர்ஜனை, சிவாஜி நடித்த தியாகி உட்பட பல படங்களில் நடித்தார். மேலும் சுமங்கலி, முத்து எங்கள் சொத்து ஆகிய படங்களில் நடித்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடிப்பில் உருவான கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் அவருக்கு சிறப்பான கேரக்டர் கிடைத்தது. இந்த படம் மூலம் தான் அவர் பிரபலமானார்.

பின்னர் புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் ரகுமான் ஜோடியாக நடித்த கீதாவிற்கு பாலச்சந்தரால் உருவாக்கப்பட்ட அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்து கொடுத்திருந்தது. கேளடி கண்மணி, உறுதிமொழி, தாயம்மா ஆகிய படங்களில் நடித்தார். ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தளபதி திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் கீதா நடித்திருப்பார்.

அழகன், தர்மசீலன், குருதிப்புனல், கல்கி போன்ற படங்களில் நடித்ததிருந்த நிலையில், இதில் கல்கி படத்தில் அவர் நடித்த செல்லம்மா என்ற கேரக்டர் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் அமைத்திருந்தது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை கீதா கடந்த 1997 ஆம் ஆண்டு வாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அதாவது 1998 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அவர் திரையுலகில் நடிக்கவில்லை. அதன் பின்னர் இந்தியா வந்த பிறகு தான் சிவகாசி, ஆழ்வார், அழகிய தமிழ்மகன், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல படங்களில் நடித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ’நின்று கொல்வான்’ என்ற படத்தை அடுத்து அவர் தமிழில் நடிக்கவில்லை. இருப்பினும் அவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும், மலையாள படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளதுடன் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ராஜகுமாரி என்ற சீரியலில் லட்சுமி மகாலிங்கம் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான காதல் பகடை, விஜய் டிவியில் ஒளிபரப்பான கதை கதையாம் காரணமாம், ஜெயா டிவியில் ஒளிபரப்பான அண்ணி போன்ற தொடர்களிலும் நடித்தார். கடந்த ஆண்டும் கூட சில ரியாலிட்டி ஷோக்களில் கீதா தலைகாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.