சின்னவீடு படத்தில் அறிமுகம்.. படப்பிடிப்பின்போது எதிர்பாராத மரணம்.. நடிகை கல்பனாவின் அறியாத பக்கங்கள்..!

Published:

திரை உலகில் சகோதரிகளான கல்பனா, ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோர்கள் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்கள். இவர்களில் ஊர்வசி தமிழ் மற்றும் மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய நடிகையாக இருந்தார். கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஊர்வசி அளவுக்கு கல்பனா பெரிய நடிகை இல்லை என்றாலும் அவரும் சில படங்களில் முக்கிய வேடங்களில், சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்துள்ளார். நடிகை கல்பனா கேரளாவை சேர்ந்தவர். அவர் சிறு வயதிலேயே நடிப்பில் நாட்டம் கொண்டிருந்ததால் முறைப்படி நடனம் மற்றும் சங்கீதம் பயின்றுள்ளார்.

85 ரூபாயுடன் சென்னை வருகை.. இளையராஜா வீட்டில் எடுபிடி.. பிரபல இசையமைப்பாளரின் வெற்றிக்கதை..!

மலையாளத்தில் 1977ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக கல்பனா அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாயகி மற்றும் முக்கிய கேரக்டரில் மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த சின்ன வீடு என்ற திரைப்படத்தில் பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடித்தார்.

kalpana2

முதல் படத்திலேயே அவர் தனது வித்தியாசமான நடிப்பை கொடுத்திருந்தார். கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறான் என்று தெரிந்தும் கணவனை நல்வழிப்படுத்த அவர் எடுக்கும் முயற்சிகள், கணவனைவிட தான் அதிகமாக படித்திருந்தாலும் கணவனுக்கு அடக்கமாக அமைதியாக இருத்தல் போன்ற காட்சிகளில் அசத்தியிருப்பார்.

கிளைமாக்ஸ் காட்சியில் கர்ப்பிணியாக மனதை உருக்கும் வகையில் நடித்திருப்பார். இந்த படம் அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு நல்ல திருப்பத்தை கொடுத்தது. இதனை அடுத்து திருமதி ஒரு வெகுமதி, சிந்து நதி பூ ஆகிய படங்களில் நடித்த அவர் சதிலீலாவதி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த் ஜோடியாக நடித்த கல்பனாவின் நடிப்பும் போற்றத்தக்கதாக இருந்தது. இதிலும் சின்னவீடு படம் மாதிரியே கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் நிலையில் அவரை திருத்தும் கேரக்டரில் நடித்திருப்பார்.

தமிழ் திரை உலகில் பாடகிகளாக மாறிய நடிகைகள் யார் யார் தெரியுமா?

இதனை அடுத்து பூச்சூடவா, வீட்டோட மாப்பிள்ளை, பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். காக்கி சட்டை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்திருப்பார். இதனை அடுத்து அவர் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த தோழா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு முடித்தவுடன் ஹோட்டலில் தங்கி இருக்கும்போது திடீரென மாரடைப்பு வந்தது. இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

kalpana1

தோழா படத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக தான் எடுக்கப்பட்டது என்றாலும் குறைவான காட்சிகளும் திருப்திகரமாக இருந்தது. இந்த படத்தில் அவருக்கு மேலும் பல காட்சிகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆனால் அவர் காலமாகிவிட்டதால் பல காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் அவரது இறப்பிற்கு பின்னர் காதல் கசக்குதையா, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஒரு சில படங்கள் வெளியாகியது.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகை கல்பனா மலையாள திரைப்பட இயக்குனர் அனில் குமார் என்பவரை கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 14 வருட திருமண வாழ்க்கையில் இருந்த நிலையில் திடீரென அவர் 2012ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்தார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் ஜெயித்த அண்ணன் – தம்பி நடிகர்கள்.. இவ்வளவு பெரிய லிஸ்ட்டா?

கல்பனாவின் மகள் ஸ்ரீமயி என்பவரும் ஒரு மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...