சினிமாவில் நடிகராகவோ, நடிகையாகவோ கால் பதிக்கும் பலரால் தொடர்ந்து ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியாது. அதை எல்லாம் கடந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலைத்து சினிமாவில் தங்கள் பெயரை பதித்தவர்கள் ஏராளம். அதில் முக்கியமான ஒருவர் தான் நடிகை பாரதி.
இவர் தனது திரை பயணத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். நடிகை பாரதி கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். சிறுவயதிலேயே நடனம், நாட்டியம் ஆகியவற்றை முறையாக பயின்று சினிமாவுக்கு ஒரு ஹீரோயினாக தயாரானார். கடந்த 1950 ஆம் ஆண்டு பிறந்தவர் தனது 16ஆம் வயதிலேயே கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக, தொடர்ச்சியாக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
கன்னடத்தில் ஐந்து படங்கள் நடித்து முடித்த பின்னர்தான் அவர் எம்ஜிஆர் நடித்த ’நாடோடி’ என்ற திரைப்படத்தில் மீனா தர்மலிங்கம் என்ற கேரக்டரில் தமிழில் அறிமுகமானார். அதற்கடுத்து இரண்டாவது படமே மீண்டும் எம்ஜிஆருடன் ’சந்திரோதயம்’ என்ற திரைப்படத்தில் கமலா என்ற கேரக்டரில் நடித்தார் . இதனையடுத்து அவர் எங்க பாப்பா, நம்ம வீட்டு லட்சுமி, தங்க தம்பி, தெய்வச்செயல், வாலிப விருந்து, நான் யார் தெரியுமா போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
இதனை அடுத்து அவருக்கு சில தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று திரையுலகிலும் பிஸியான நடிகையாக உருவெடுத்தார் பாரதி. சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் என்ற திரைப்படத்தில் அவர் சிவகுமார் ஜோடியாக நடித்திருப்பார். இதனையடுத்து நிமிர்ந்து நில், பூவும் பொட்டும், நான்கு கில்லாடிகள் போன்ற படங்களில் நடித்த அவருக்கு சிவாஜி கணேசன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சிவாஜிகணேசன் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்த தங்கச் சுரங்கம் என்ற திரைப்படத்தில் பாரதி தான் நாயகி. இருவருமே போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தில் நடித்திருப்பார்கள். அவர் நில் கவனி காதலி, சினேகிதி, அவளுக்கு என்று ஒரு மனம், மீண்டும் வாழ்வேன், அன்னமிட்ட கை போட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவர் கவனம் முழுக்க கன்னட திரையுலகம் பக்கம் சென்றது.
1980களில் அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஒரு சில கன்னட படங்களில் மட்டுமே அவர் நடித்து வந்த நிலையில் எம் 1986 ஆம் ஆண்டு மட்டும் படிக்காத படம் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இதனை அடுத்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 1990 ஆம் ஆண்டு தான் தமிழில் உறுதிமொழி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இதன் பின்னர், அவர் மீண்டும் இடைவெளி விட்டு கட்ட பஞ்சாயத்து, காதலே நிம்மதி, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் நடித்தார். இவர் தனது திரை பயணத்தில் சுமார் 50 ஆண்டுகளில் 150 படங்கள் வரை நடித்து பெயர் எடுத்திருந்தார்.