5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…

By Bala Siva

Published:

தற்போது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்துவிட்டு வருவது போல் அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. எம்ஜிஆர், சிவாஜி, என்எஸ்கே உட்பட பலரும் நாடகத்திலிருந்து சினிமாவில் வந்தவர்கள் தான். இதனால் தான் அவர்களால் சினிமாவிலும் மிகப்பெரிய புகழை அடைய முடிந்தது.

அந்த வகையில் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ஒருவர் தான் எஸ்.வி. சகஸ்ரநாமம். 1913 ஆம் ஆண்டு கோவையில் பிறந்த இவர் சிறு வயதிலேயே நாடகக் கலைக்கு வந்துவிட்டார். சிறுவயதில் அபிமன்யு சுந்தரி என்ற நாடகத்தை பார்த்து அந்த நாடகத்தை நடித்த டி கே சண்முகம் போல் தானும் நடிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

எஸ்வி சகஸ்ரநாமம் 12 வயது முதலே நாடகத்தில் நடிக்க தொடங்கினார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு முழுக்க முழுக்க நாடகத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார். டிகேஎஸ் சகோதரர்களின் நாடக சபா  உள்பட பலரது நாடகத்தில் அவர் நடித்தார். அதன் பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

1935ஆம் ஆண்டு ’மேனகா’ என்ற படத்தில் நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமம், அதன்பின்னர் கண்ணகி,  பிரபாவதி, பூம்பாவை, பைத்தியக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இதில் பைத்தியக்காரன் என்ற திரைப்படம் என்எஸ் கிருஷ்ணன் சிறையில் இருந்த போது அவரை வெளியே எடுக்க தேவையான செலவுக்காக டிஏ மதுரம் எடுத்த படம் என்பதும் அந்த படத்தில் அவர் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததாகவும் கூறப்படுவதுண்டு.

இதையடுத்து, சிவாஜி கணேசன் அறிமுகமான ’பராசக்தி’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் சகோதரராக நடித்த டி கே சண்முகம், கண்கள், எதிர்பாராதது, நீதிபதி, குலதெய்வம், நானே ராஜா, செங்கோட்டை சிங்கம் உட்பட பல திரைப்படங்களிலும் நடித்தார்.

எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்களுடன் நடித்த அவர், பின்னாளில் கே.பாலசந்தர் திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக ’இரு கோடுகள்’ என்ற திரைப்படத்தில் அவர் ஜெயந்தியின் தந்தையாக நடித்திருப்பார். அவரின் நடிப்பும் அந்த படத்தில் தனித்தன்மையுடன் இருக்கும். அதன் பிறகு சோப்பு சீப்பு கண்ணாடி, புன்னகை, சபதம், நவாப் நாற்காலி போன்ற படங்களில் நடித்தார்.

எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆரின் சகோதரராக நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமம், 1976 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் என்ற திரைப்படத்தில் அரசன் வேடத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் மூன்று வருடங்கள் திரையுலகில் இருந்து விலகி இருந்தவர், 1979 ஆம் ஆண்டு ஞானக் குழந்தை என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து வேறு எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் ஐந்து முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். அதன் பிறகு அவர் ’நந்தா விளக்கு’ என்ற நாடகத்திற்காக 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஆறாவது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அந்த மாரடைப்பில் அவர் உயிர் பிழைக்கவில்லை. அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமே வந்து இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.