சித்தி சீரியலில் நடந்த அவமானம்.. அத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்ட சிவக்குமார்.. இதான் காரணமா?

By John A

Published:

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி ஆகியோரின் காலம் மெல்லக் குறைந்து அடுத்த தலைமுறை நடிகர்களான முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து வந்த வேளையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்தி அனைத்து நடிகர்களுடன் நடித்து மேலும் தனி ஹீரோவாகவும் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர் நடிகர் சிவக்குமார்.

ஓவியங்கள் வரைவதில் கைதேர்ந்தவரான சிவக்குமார் ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜியின் ஓவியத்தை அவரிடம் காட்டி பாராட்டுப் பெற்றார். நடிகர் திலகம் அத்தோடு நிற்காமல் முதன் முதலாக திரைப்படங்களுக்கு ஓவியம் வரையும் மோகன் ஆர்ட்ஸ் என்ற வரைகலைப் பயிலகத்தில் சேர்க்க அங்கே ஆரம்பித்தது தான் சிவக்குமாரின் கலைப் பயணம். ஓவிய மாஸ்டராக தன் வாழ்க்கையைத் துவங்கி முயற்சியினால் காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலமாக நடிகராக ஆரம்பித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி., உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் உடன் நடித்து பின் தனி ஹீரோவாக ஜொலித்தார்.

ஒருபக்கம் ரஜினி, கமல் ஆகியோர் ஜொலித்துக் கொண்டிருக்க சிவக்குமாரோ அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இதனால் இவர் தென்னகத்து மார்கண்டேயன் எனப் புகழப்பட்டார்.

தனுஷ் இயக்கும் படத்தில் மகன் யாத்ரா கொடுத்த சூப்பர் என்ட்ரி.. அதுவும் இப்படி ஒரு ரூட்லயா..

சினிமா மட்டுமின்றி அடுத்து தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த எத்தனை மனிதர்கள், கையளவு மனசு சீரியல்கள் தூர்தர்ஷனில் மெஹா ஹிட் ஆனது. தொடர்ந்து தந்தை வேடங்களில் நடிக்க ஆரம்பித்த சிவக்குமார் எத்தனை மனிதர்கள் சீரியலுக்கு அடுத்ததாக சன்டிவியில் சித்தி சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது சிவாஜி போன்று தனது நடிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக கதாபாத்திரத்தை ஆத்மார்த்தமாக உணர்ந்து அழும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு நடிகை சிரித்தாராம்.

இயல்பாகவே சற்று முன்கோபம் கொண்ட சிவக்குமாருக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டு இனி நடிக்கக் கூடாது என்று சபதம் எடுத்து தான் ஒப்புக் கொண்டவற்றை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு சினிமா, சீரியல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகியிருக்கிறார் சிவக்குமார். கதாநாயகனாக நடித்துப் பெற்ற சம்பளத்தைக் காட்டிலும் சீரியல்களில் நிறைய சம்பாதித்த சிவக்குமார் ஒருகட்டத்தில் அந்தத் துறையில் மரியாதை இல்லாததால் விலகியிருக்கிறார்.

எனினும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இன்று தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார்களாக உருவெடுத்து நடித்து வருகின்றனர்.