தெளிவான உச்சரிப்பு, கம்பீரமான குரல் வளத்துடன் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சிவகுமார். பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர் என பன்முகத்திறன் கொண்ட கலைஞர் இவர். பக்தி படங்களில் பரவசமான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர்.
இவர் குறிப்பாக 70களின் மத்தியில் ரஜினியும், கமலும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்த காலத்தில், கடந்த காலத்தின் முன்னணி நடிகராக இருந்தார். 80 களின் நடுப்பகுதி வரை, 1980 களின் பிற்பகுதி வரை நல்ல படங்களைத் தயாரித்தார்.
அவர் எப்போதுமே குடும்பப்பாங்கான படங்களில் நடித்து தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்றார். அதே நேரம் தமிழ்த்திரை உலகில் கமல் அல்லது ரஜினி கோலூச்சிய கால கட்டம். ஆனால் இவர்களது புகழ் மகுடம் சிவகுமாரின் திரை உலக வாழ்க்கையை அதிகம் பாதிக்கவில்லை.

அந்தக் கால கட்டத்தில் சிவகுமாருக்குப் போட்டியாக முக்கியமாக பாக்யராஜ், விசு, சுரேஷ் போன்ற நடிகர்கள் இருந்தனர். 1980களில் பிரபலமான சிந்து பைரவி உட்பட அவர் வெற்றிப்படங்களை வழங்கினார்.
உண்மை என்னவென்றால், சிவகுமார் தான் ஒரு மசாலா நடிகராக மாற முடியாது என்பதை முன்பே தெரிந்து வைத்திருந்தார். எனவே குடும்பப் பாங்கான வேடங்கள் மற்றும் நாடகக் கதாபாத்திரங்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்.
அது மட்டுமல்லாமல் மசாலா பாத்திரங்களுக்கு மயங்கி விடாமல் இருந்தார். இது தான் அவருக்கு மார்க்கெட் குறைவதற்கும் காரணமாயிற்று. அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப தன்னை உருமாற்றம் செய்யும் நடிகர்கள் தான் ரசிகர்கள் மத்தியில் தாக்குப் பிடிக்க முடியும்.
உதாரணத்திற்கு கமல், ரஜினி போன்ற ஜாம்பவான்களைச் சொல்லலாம். ஆனால் பிரசாந்த், பரத் மாதிரியான நடிகர்கள் ஒரே பாணியில் நடித்துக் கொண்டே இருந்து இருந்து… பெருவாரியான ரசிகர்களை இழந்து விட்டனர். இந்த சம்பவம் தான் சிவகுமாருக்கும் நடந்தது.

1991 ஆம் ஆண்டு அவர் முன்னணி நடிகராக நடித்த கடைசி படம் சார் ஐ லவ் யூ. இந்தப் படத்தில் சிவகுமாருடன் ரஞ்சினி நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து சிவகுமார் சிறிது காலம் குணச்சித்திர நடிகராக நடித்தார். கடைசியாக 1999ல் சன் டிவியில் சித்தி தொடரில் ராதிகாவின் கணவராகவும், சேதுவில் விக்ரமின் அண்ணனாகவும் நடித்தார்.
அவர் கடைசியாக நடித்த படம் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமாரின் பூவெல்லாம் உன் வாசம். இந்தப் படத்தில் அஜித்தின் அப்பாவாக சிவகுமார் நடித்து அசத்தினார். சிவகுமாரின் கேரியரில் தோல்விகள் மிகக் குறைவு. அவரது படங்கள் சாதனைகளை முறியடிக்கவில்லை. ஆனால், அவை எப்போதும் லாபத்தை ஈட்டித் தந்த வண்ணம் இருந்தன.

ஆனால் அவற்றில் இருந்து விதிவிலக்காக வந்த படம் அன்னக்கிளி. இது இளையராஜாவின் முதல் படம். சிவகுமாருடைய படங்களின் பல சாதனைகளை முறியடித்த படம் இதுதான். இவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


