தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு எப்படி ஆஸ்தான வில்லனாக எம்.என்.நம்பியார் திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்றாரோ அதே போல் ரஜினி படங்களில் அவருக்கு ஆஸ்தான வில்லனாக நடித்தவர் ரகுவரன். ரகுவரன் என்றாலே அவரின் சிறந்த நடிப்பு அனைவருக்குமே மிகப் பிடித்தமான ஒன்று.
வில்லன் என்பதற்கு தனி இலக்கணம் வகுத்தவர். சில நேரங்களில் படத்தில் ஹீரோவை விட அவர்தான் தன் வில்லத்தனத்தில் தூக்கிச் சாப்பிட்டு விடுவார். இப்படி வில்லனாக அவர் எந்தப் படத்தில் அறிமுகமானார் தெரியுமா?
1986-ல் ஏ.வி.எம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படமான மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் தான் ரகுரன் முதன் முதலாக வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழில் ஏழாவது மனிதன் படம் மூலமாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு மிஸ்டர் பாரத் திரைப்படம் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. மேலும் அதே ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சிதம்பரம் கதாபாத்திரம் அவரை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டு சேர்த்தது.
ரகுவரன் மிஸ்டர் பாரத் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் இவரின் மேனரிஸத்தைப் பார்த்த ஏ.வி.எம் சரவணன் அவரை அழைத்து ஓர் தாடி வைத்து வரும்படிக் கூற அவருக்கு வில்லன் கதாபாத்திரம் அப்படியே பொருந்திப் போயிருக்கிறது.
தொடர்ந்து சில மேனரிஸங்களைச் செய்து காட்டும் படி ஏ.வி.எம் சரவணன் கேட்க ரகுவரன் தனது ஸ்டைலைச் செய்து காட்ட அந்தப் படத்தின் மெயின் வில்லனானார். சத்யராஜ் இருந்தாலும் தனி வில்லன் கேரக்டரில் ரகுவரனும் மிரட்டினார்.
இப்படித்தான் இவரின் வில்லன் கதபாத்திரங்கள் அறிமுகமானது. தொடர்ந்து ரஜினியுடன் ஊர்க்காவலன், மனிதன், சிவா, ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா, அருணாச்சலம் என தொடர்ந்து நடித்தார். கடைசியாக சிவாஜி படத்திலும் ரஜினியின் நண்பனாக வந்து மிரட்டியிருப்பார் ரகுவரன். இதில் ரகுவரன் நடித்த அனைத்துப் படங்களுமே அவருக்கு தீனி போடும் கதாபாத்திரங்களாகவே அமைந்தன.
குறிப்பாக காதலன், முதல்வன், இரட்சகன், என் சுவாசக் காற்றே, அமர்க்களம், முகவரி போன்ற படங்கள் ரகுவரனின் பல்சுவைக் கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்துநிறுத்தியது. இதற்குக் காரணமாக இருந்தது மிஸ்டர் பாரத் திரைப்படம் என்றால் அது மிகையாகாது.