வேறு துறைகளில் சாதித்திருக்கும் பலருக்கும் கூட சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி வேறு ஒரு பணியில் இருந்து விட்டு சினிமாவில் சாதித்தவரை பற்றி தற்போது பார்க்கலாம். சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் ராணுவ கேப்டன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்கள். ஆனால் உண்மையாகவே ராணுவத்தில் கேப்டனாக இருந்து அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்தவர் தான் கேப்டன் ராஜு.
நடிகர் கேப்டன் ராஜ் கேரளாவை சேர்ந்தவர். அவர நான்கு சகோதரிகளுடன் பிறந்ததால் குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கேப்டன் ராஜ் ஒரு வாலிபால் விளையாட்டு வீரராக இருந்தார்.
உயிரியல் பட்டப்படிப்பு படித்த கேப்டன் ராஜு அதன் பின்னர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். மிக குறைந்த வயதிலேயே அவர் கேப்டன் என்ற பதவியை பெற்றார். ராணுவத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் ஒரு சில நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
1981 ஆம் ஆண்டு ’ரக்தம்’ என்ற மலையாள திரைப்படத்தில் அவர் அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள நிலையில், சுமார் 200 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என கிட்டத்தட்ட 600 படங்கள் நடித்துள்ள கேப்டன் ராஜ், தமிழில் விஜயகாந்த் மற்றும் தியாகராஜன் இணைந்து நடித்த ’நல்ல நாள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழில் தொடர்ச்சியாக அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ ’ஜல்லிக்கட்டு’ ’உள்ளம் கவர்ந்த கள்வன்’ ’தர்மத்தின் தலைவன்’ ’என் ஜீவன் பாடுது’ ’சூரசம்காரம்’ ’சின்னப்பதாஸ்’ ’என் ரத்தத்தின் ரத்தமே’ உள்ளிட்ட பல படங்களில் அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார். அவருடைய கம்பீரமான உருவம், உயரமான தோற்றம் ஆகியவை மிரட்டலான வில்லன் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ’பொன்னர் சங்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அவர் தமிழில் நடிக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகர் கேப்டன் ராஜு நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு கார் விபத்தில் ஒன்று சிக்கினார். அதனால் அவரது பார்வை சிறிது இழந்ததாகவும் கூறப்பட்டது
அதன் பிறகு அவருக்கு பல உடல்நிலை குறைவுகள் ஏற்பட்டது. மேலும் அவருக்கு சர்க்கரை நோயும் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். மீண்டும் ஒருமுறை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாரடைப்பு ஏற்பட்டது. இரண்டாம் முறையும் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் அதே ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
கேப்டன் ராஜு மறைந்தாலும் அவர் நடித்த பல திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.