இன்றும் நம்மூரில் வீட்டில் பெண்ணுக்கு வரன் பார்க்கும் படலம் நடந்தால் மாப்பிள்ளை அர்விந்த்சாமி மாதிரி வேண்டும் என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த அளவிற்கு ரசிகைகள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் நடிகர் அர்விந்த்சாமி. மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தனது அழகால் ஆண்களையே மயக்கினார். பெண்கள் இவர் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. தொடர்ந்து வந்த ரோஜா திரைப்படம் அர்விந்த்சாமியை உச்சத்தில் நிறுத்தியது.
அதனைத் தொடர்ந்து மறுபடியும் படத்தில் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்.. என்று இளசுகளை அலைய வைத்தவர் மீண்டும் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் இவரை இந்தியாவின் டாப் ஹீரோவாக்கியது. உயிரே.. உயிரே பாடலில் இவர் காட்டும் முக பாவனைகள் நிஜத்தில் காதல் வலியையே கொடுத்தது எனலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ஈடுபாடு கொண்ட அர்விந்த் சாமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த போதிலும் ரோஜா, பம்பாய் அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் என் சுவாசக் காற்றே படம் ஓரளவு வெற்றி பெற, அதன்பின் அலைபாயுதே, மின்சாரக் கனவு ஆகிய படங்களில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார்.
இந்நிலையில் அர்விந்த்சாமி பிஸினெஸ் பக்கம் செல்ல படங்களில் நடிப்பதைக் குறைத்தார். 2005-ல் சாசனம் படத்தில் அவர் நடித்த போது அப்படம் சரியான வெற்றியைப் பெறவில்லை. அந்த தருணத்தில் அர்விந்த் சாமி வாழ்க்கையில் வீசிய புயல் அவரை நிலைகுலைய வைத்தது. விபத்து ஒன்றில் சிக்கிய அர்விந்த்சாமி அறுவை சிகிச்சையால் வீட்டிலேயே சில வருடங்கள் முடங்கினார். மேலும் அவர் தலைமுடி அனைத்தும் கொட்டி விட்டது. உடல் பருமனும் அதிகமாக எந்த அளவிற்கு ரசிகைகளை ஈர்த்தாரோ அப்படியே எதிராக ஆளே மாறிப் போனார்.
சூர்யாவின் அன்பால் பூத்த சிங்கம்புலி – சினிமா பயணம்!
மீண்டும் 2012-ல் மணிரத்னத்திடமிருந்து அழைப்பு. அப்போது கடல் படம் உருவாகிக் கொண்டிருந்தது. மணிரத்னம் அர்விந்த்சாமியை நடிக்க வைப்பதென தீர்மானமாக இருந்தார். அர்விந்த்சாமியிடம் கேட்கையில் 2 மாத அவகாசம் கேட்டிருக்கிறார். அதற்குள் மீண்டு வந்தால் நடிக்கிறேன் என்று கூற, மணிரத்னமும் ஓகே சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அர்விந்த்சாமி தன்னம்பிக்கையுடன் ஒரே மாதத்தில் ஆளே மாறினார்.
கடுமையான உடற்பயிற்சி, உட நல ஆரோக்கியம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஒரே மாதத்தில் பழைய அர்விந்த்சாமியாக மணிரத்னம் முன் நிற்க, கடல் படம் உருவானது. இருப்பினும் கடல் படம் வெற்றியடைய வில்லை என்றாலும் அர்விந்த்சாமிக்கு 8 வருடங்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி ஆனது. அதனைத் தொடர்ந்து தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக வில்லனாக மிரட்ட படம் சூப்பர் ஹிட் ஆனது.
தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார் போகன், தலைவி என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்தார். கடைசியாக நடித்த மெய்யழகன் படம் பழைய அர்விந்த்சாமியை அவரது ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.