திரைத்துறையில் கதாநாயகர்களாக சிறந்து விளங்கியவர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பலரை சொல்லலாம். ஆனால் வில்லனாக நடித்து தனக்கென்று தனி அடையாளத்தையும் தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்திருந்தவர் மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற எம் என் நம்பியார் தான். வில்லாதி வில்லனாக அறியப்படும் நம்பியார் அவர்கள் முதன் முதலில் நடித்தது 1935 இல் வெளியான பக்தராமதாஸ் திரைப்படத்தின் நகைச்சுவை கதாபாத்திரம் தான்.
வில்லன் நம்பியார்
வில்லன் நம்பியார் என்ற பெயர் பெற்ற இவர் கதாநாயகனாக கல்யாணி, வேலைக்காரி உள்ளிட்ட சில படங்களில் நடித்த போது ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வில்லன் நடிகரை தான் ரசிகர்கள் கொண்டாடினர். என்ன தான் திரையில் வில்லனாக கெட்டவராக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் குழந்தை மனதுடன் இரக்க குணம் உள்ள நல்லவராக தான் நம்பியார் அறியப்பட்டார்.
நம்பியார் சாமி
நம்பியார் அவர்கள் ஒரு வருடத்தில் இரண்டு மலைக்கு நிச்சயமாக சென்று விடுவார். ஒன்று அவர் பிறந்து வளர்ந்த நீலகிரி மலை, மற்றொன்று ஐயன் ஐயப்பனின் சபரிமலை. தான் மட்டுமல்லாது தன்னுடன் நடித்த பலரையும் நம்பியார் சபரிமலைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் நண்பர்கள் வட்டாரத்தில் நம்பியார் சாமி, குருசாமி என அழைக்கப்பட்டார்.
திகம்பர சாமியார்
திரை உலகில் நம்பியார் நடித்து ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட படம் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியான திகம்பர சாமியார். 73 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படம் வரலாற்று கதையையோ அல்லது அரசு ராஜியக் கதையோ மையமாக வைத்து எடுக்கப்பட்டது அல்ல. இது முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார் நம்பியார்.
11 கதாபாத்திரம்
அதுவும் வெற்றிலை வியாபாரி, செவிட்டு மந்திரவாதி, நாதஸ்வர வித்வான், போஸ்ட்மேன், இஸ்லாமியர் உள்ளிட்ட 11 கதாபாத்திரத்தில் இந்த ஒரு படத்தில் நம்பியார் தோன்றியிருப்பார். அந்த காலத்திலேயே இத்தனை கதாபாத்திரங்களில் ஒரே படத்தில் நடித்தது மூலம் கமலின் தசாவதாரத்திற்கு முன்பே நம்பியார் அதிக கதாபாத்திரங்களில் நடித்தவர் என்ற பெயரை பெற்றுவிட்டார் என்றே கூறலாம்.