தேனி: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், ராணுவப் பணியின் போது உயிர்நீத்த படைவீரர்களின் மனைவிகள் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை, வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில் முனைவோருக்கு, திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் அரசால் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், ராணுவப்பணியின்போது உயிர்நீத்த படைவீரர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பெற வரும்போது, தொடங்கப்படவுள்ள தொழில் குறித்த விரிவான திட்ட அறிக்கை, அசல் அடையாள அட்டை மற்றும் அசல் படைவிலகல் சான்று ஆகியவற்றுடன் வர வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.