கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாகத் தகுதிச் சான்றிதழ் வழங்கியதாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் மீது தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக 2022-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அண்மையில் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர் நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை 2024-ல் அதாவது திமுக ஆட்சியில் அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது. தேர்தல் மேடைகளில் “ஊழல்வாதிகளைச் சிறையில் அடைப்போம்” என்று முழங்கிய திமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு போட்ட வழக்கையே இப்போது வாபஸ் வாங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மத்தியில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
திமுகவின் தீவிரக் கொள்கைப் பிடிப்புள்ள அடிமட்டத் தொண்டர்கள் இந்த விவகாரத்தால் ஒருவித ஏமாற்றத்திற்கும் தர்மசங்கடத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம். “ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் முந்தைய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம், தவறு செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று தலைமை கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, களத்தில் எதிர்கட்சியினருடன் மல்லுக்கட்டிய தொண்டர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முக்கியப் புள்ளிகள் மீதான வழக்குகள் இப்படித் திடீரெனக் கைவிடப்படும்போது, தங்களின் இத்தனை கால அரசியல் உழைப்பும் களப்போராட்டமும் அர்த்தமற்றதாகி விடுமோ என்ற ஆதங்கம் சமூக வலைத்தளங்களில் இருக்கும் உடன்பிறப்புகள் பலரின் பதிவுகளில் வெளிப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் திமுகவிற்காக அல்லும்பகலும் வாதாடும் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் இப்போதைக்கு இந்த மேட்டரைக் கையாள்வதில் பெரும் திணறலைச் சந்தித்து வருகிறார்கள். வழக்கமாக மாற்றுத் திறனாய்வாளர்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ திமுகவை “அரசியல் சமரசம்” செய்துகொள்வதாக விமர்சிக்கும் போதெல்லாம், அதற்குப் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுக்கும் இந்த ஐடி விங் கேடர்கள், இந்த விவகாரத்தில் என்ன சொல்லி முட்டுக்கொடுப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இருப்பினும், திமுகவின் முன்னணித் தலைவர்களும் ஐடி விங்கின் முக்கியப் பொறுப்பாளர்களும் இந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நியாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த முடிவு ஒரு அரசியல் சமரசம் அல்ல என்றும், முறையான சட்டப்பூர்வ விசாரணையின் அடிப்படையில் போதிய முகாந்திரம் மற்றும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே இந்த வழக்கு கைவிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். “திமுக அரசு ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாது, சட்டம் தன் கடமையைச் செய்யும், அதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை” என்பதைக் காட்டுவதற்கான ஒரு சான்றுதான் இது என்று ஒரு புதிய விளக்கத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.
மேலும், ஒரு தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆகியவை முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்த இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளன என்பதைத் தலைமை நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிநபர்கள் என்ற அடிப்படையிலும், ஆரம்பக்கட்ட சோதனைகளில் போதிய ஆவணங்கள் சிக்காததாலும் சட்ட விதிகளின்படியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவாலயத் தரப்பில் கூறப்படுகிறது. அரசு நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டவே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று கட்சியின் மூத்த தலைவர்கள் தொண்டர்களைச் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
எது எப்படியாயினும், இந்த எஃப்.ஐ.ஆர் ரத்து விவகாரம் திமுகவிற்குள் ஒரு உள்முக விவாதத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை. வெறும் பழிவாங்கும் அரசியல் செய்யாமல், ஆதாரங்களின் அடிப்படையிலேயே தங்களது அரசு இயங்கியது என்ற பிம்பத்தை உருவாக்க அறிவாலயம் தீவிரமாக முயன்று வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
