தமிழக போக்குவரத்து துறையில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முந்தைய திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான மாபெரும் டெண்டரை தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது
ஜெர்மன் வளர்ச்சி வங்கியான KfW நிதியுதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு, கடந்த ஜூன் 18 ஆம் தேதி அந்த நிதி நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. அரசுப் பணத்தை வீணடிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்ற தற்போதைய அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், முந்தைய அரசின் இந்த டெண்டர் நடைமுறை தற்போதைய சூழலில் நிதி ரீதியாக எந்தவொரு பலனையும் அளிக்கக்கூடியதாக இல்லை என்று தெரிவித்துள்ளார். புதிய இ-பஸ்களை நேரடியாக வாங்குவதற்கும், அதற்கான நடத்துனர்களை நியமிப்பதற்கும், அதன் பிரம்மாண்ட பராமரிப்பு செலவுகளை முழுமையாக தாங்குவதற்கும் தற்போதைய அரசு போக்குவரத்து கழகங்கள் போதுமான நிதி நிலையில் இல்லை என்பதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் பழைய ஸ்டாண்டர்ட் மாடலுக்கு பதிலாக, உலகளவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் புதிய நடைமுறைக்கு மாற அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ‘ஜிசிசி’ எனப்படும் மொத்தச்செலவு ஒப்பந்த மாதிரியை நோக்கி பயணிக்க தவெக அரசு முடிவு செய்துள்ளதுடன், அதற்குரிய ஒப்புதலை வழங்குமாறு ஜெர்மன் வங்கியான KfW நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளது. இந்த புதிய ஜிசிசி மாடலின் கீழ், டெண்டரில் வெற்றி பெறும் தனியார் ஆபரேட்டர்கள் தங்களது சொந்த செலவிலேயே மின்சாரப்பேருந்துகளை வாங்கி, இயக்கி, முழுமையாக பராமரிப்பார்கள். அரசு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு இவ்வளவு தொகை என்ற நிலையான கட்டணத்தை மட்டுமே வழங்கும் என்பதால், போக்குவரத்து துறைக்கு ஏற்படும் தேவையற்ற மாதாந்திர நிதிச்சுமை பெருமளவு தவிர்க்கப்படும்.
இந்தியாவின் பெரும்பாலான முக்கியப் பெருநகரங்களிலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திலும் ஏற்கனவே இந்த ஜிசிசி மாடல்தான் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சென்னை நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் மூலமாக மேலும் 625 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கும் இதே ஜிசிசி மாடலையே பயன்படுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இந்த புதிய வணிக மாதிரி மற்றும் நிர்வாக மாற்றங்கள் காரணமாகவே முந்தைய திமுக அரசின் 500 பேருந்துகளுக்கான பழைய டெண்டர் முழுமையாக நிராகரிக்கப்பட்டு, புதிய ஏலத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை சட்டசபையில் ஆளுநர் உரைக்குத் தனது முதல் பதிலை அளித்துப் பேசும்போது, பொதுமக்களின் வரிப்பணத்தை எவரும் தவறாகப் பயன்படுத்துவதை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், கடந்த காலங்களில் அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட எவரையும் சும்மா விடப்போவதில்லை என்றும் ஆவேசமாக முழங்கினார். அதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
