தமிழகத்தின் தூத்துக்குடியில் அமையவிருந்த பிரம்மாண்ட கப்பல் கட்டும் தள முதலீடு அண்டை மாநிலத்திற்கு திசைமாறி போன விவகாரம் தற்பொழுது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகுதான் இந்த முதலீடு தமிழ்நாட்டை விட்டுப் போனது என்று சிலர் திட்டமிட்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் வேளையில், அதற்கு முந்தைய திமுக அரசின் தவறான அணுகுமுறையும், வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாகமுமே உண்மையான காரணம் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. `
இந்தியாவின் மிக முதன்மையான பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான Mazagon Dock Limited – MDL, தூத்துக்குடியில் சுமார் 1,050 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான பசுமைவழி கப்பல் கட்டும் வளாகத்தை அமைக்க திட்டமிட்டிருந்தது. இதற்காக, கடந்த 2025 செப்டம்பரில் அப்போதைய திமுக அரசுடன் அந்த நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டது.
இந்த திட்டத்தின் மூலம் ரூ. 15,000 முதல் ரூ. 18,000 கோடி வரையிலான மாபெரும் முதலீட்டை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர மசகான் டாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தயாராக இருந்தது. 3,000,000 DWT வரையிலான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்களை இலக்காக கொண்டு, அடுத்த 10-12 ஆண்டுகளில் இந்த வளாகத்தை மேம்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இருப்பினும், தாராளமான மத்திய அரசின் மானியங்களும், ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான மாநில அரசின் சலுகைகளும் கிடைக்கவிருந்த இந்த அதிமுக்கிய திட்டத்தில், இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு முறையான போட்டி ஏல வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் கடல்சார் வளர்ச்சி பார்வையின் கீழ் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் சூழலில், இந்திய நிறுவனங்களை புறந்தள்ளிவிட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முற்பட்டு சிவப்பு கம்பளம் விரித்த முந்தைய திமுக அரசின் செயல்பாடு தற்பொழுது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
திமுக அரசு மசகான் டாக் நிறுவனத்தின் திட்ட முன்மொழிவுக்கு பதிலளிக்காமலும், சிறப்பு நோக்கு வாகன வழிமுறையை தொடங்காமலும் வேண்டுமென்றே காலந்தாழ்த்தி வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் போடப்பட்ட அடுத்த ஒரே மாதத்தில், மதுரையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஹெச்டி ஹூண்டாய் என்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான பிரத்தியேக வணிக ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசர அவசரமாக கையெழுத்தானது. சுமார் 2 முதல் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த வெளிநாட்டு திட்டத்தை ‘இரண்டாவது உல்சான்’ என்று அவர்கள் வர்ணித்து கொண்டாடினர்.
இந்த அவசர ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள காலவரிசையை உற்று நோக்கினால், முந்தைய அரசு விதிமுறைகளையும், போட்டி ஏல நடைமுறைகளையும் எவ்வாறு காற்றில் பறக்கவிட்டது என்பது தெளிவாக புரிகிறது. மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் கப்பல் கட்டும் மேம்பாட்டு திட்ட வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு 19 நாட்களுக்கு முன்பே, இந்த வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிக்கப்பட்டுவிட்டது. தேர்வு முறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகள் அமலுக்கு வரும் முன்பும், அதற்கான சிறப்பு நோக்கு வாகனம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படும் முன்பும், ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் ‘ஆங்கர் ஷிப்யார்டு’ ஆகத் தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டது அப்பட்டமான வெளிப்படைத்தன்மையின்மையைக் காட்டுகிறது.
முந்தைய திமுக அரசின் இத்தகைய ஒருதலைப்பட்சமான மற்றும் அலட்சிய போக்கால், தமிழ்நாட்டில் நீண்ட காலம் காத்திருந்து ஏமாற்றமடைந்த மசகான் டாக் நிறுவனம், தற்பொழுது தனது முதலீட்டு பாதையை மாற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டை விட்டு விரட்டப்பட்ட அந்த நிறுவனம், தற்பொழுது ஆந்திர பிரதேசத்தில் சுமார் ரூ. 29,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட கப்பல் கட்டும் வளாகத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை தீவிரமாக தொடங்கியுள்ளது. சொந்த நாட்டு பொதுத்துறை நிறுவனத்தை நம்பாமல், வெளிநாட்டு நிறுவனங்களின் சுயநலத்திற்காக தமிழ்நாட்டின் மாபெரும் தொழில் வாய்ப்பை அண்டை மாநிலத்திற்கு தாரைவார்த்த பெருமை முந்தைய திமுக அரசையே சாரும் என்று நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
