தமிழக அரசியல் களம் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய புதிய வியூகங்களாலும், கூட்டணி கணக்குகளாலும் மிகவும் சுவாரசியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களின் ராஜினமாவால் காலியாகியுள்ள நாடாளுமன்ற மேலவை எம்பி இடத்தை, தவெக அரசு அமைவதற்கு ஆதரவளித்த கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்குவதாக முதலமைச்சர் விஜய் அவர்கள் எடுத்துள்ள முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது இந்த முடிவு தவெக-விற்கு ஒரு இழப்பாக தோன்றினாலும், ஆழமாக உற்று நோக்கினால் இந்த ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிகவும் சாதுரியமாகவும், தீர்க்கதரிசனத்துடனும் நடந்து கொண்டிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.
முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த அதிரடி நகர்வு, தங்களது புதிய அரசுக்கு தோள் கொடுத்து நிற்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையையும், தார்மீக பலத்தையும் அளித்துள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதிகார பகிர்விலும், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதிலும் புதிய அரசு ஒருபோதும் சுயநலமாக செயல்படாது என்ற நல்ல பிம்பத்தை இது மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், திராவிட கட்சிகள் தவெக அரசுக்கு எதிராப் பல்வேறு திரைமறைவு சூழ்ச்சிகளை செய்து வரும் வேளையில், தனது கூட்டணியை மிகவும் பலமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே முதலமைச்சர் இந்த அரசியல் விட்டு கொடுப்பை கையில் எடுத்துள்ளார்.
இருப்பினும், இந்த ராஜ்யசபா சீட்டின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப ரீதியான எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில், இது ஒரு முழுமையான ஆறு ஆண்டுகால பதவி கிடையாது. அதிமுகவின் சி.வி.சண்முகம் அவர்கள் ஏற்கனவே எம்பியாக பணியாற்றிய ஆண்டுகள் கழிக்கப்பட்டு, மீதமுள்ள வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த இடத்திற்கான ஆயுட்காலம் ஆகும். எனவே, இந்த இரண்டு வருட பதவி கால விஷயத்தில் ஒரு சிறு சமரசம் செய்துகொள்வதன் மூலம், தவெக தனது கூட்டணி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் தற்காலிகமாக இந்த இடத்தை விட்டுக்கொடுத்து, டெல்லி மேலிடத்தின் ஆதரவை தக்கவைத்து கொள்ளும் விஜய் அவர்கள், வரும் 2028-ஆம் ஆண்டில் இதே பதவி மீண்டும் முழுமையாக வரும்போது தங்களது சொந்த கழக தோழர் ஒருவருக்கு அந்த மாபெரும் வாய்ப்பை வழங்க போகிறார் என்பதே இதன் பின்னாலுள்ள மாஸ்டர் பிளான் ஆகும்.
மறுபுறம், இந்திய அரசியல் வரலாற்றிலேயே தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாதிரி ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்த கட்சியை எங்குமே பார்க்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் வேடிக்கையாகவும் வியப்போடும் பேசி வருகின்றனர். தேர்தல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னாடி வரை ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிடம் மிக கடுமையான பேரம் பேசி ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்றுக் கொண்டது காங்கிரஸ். அதன் பின்னர் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், சற்றும் தாமதிக்காமல் தவெக கூட்டணிக்குள் நுழைந்து இரண்டு மிக முக்கியமான மந்திரி பதவிகளையும் பெற்றுக்கொண்டது. இப்போது சி.வி.சண்முகம் ராஜினமாவால் வந்த இடத்தையும் தவெக-விடம் இருந்து தட்டி பறித்துள்ளது காங்கிரசின் அசாத்திய அரசியல் லாபிக்கு சான்றாகும்.
தேர்தலுக்கு முன்னால் ஒரு எம்பி பதவி, தேர்தலுக்குப் பிறகு இரண்டு மந்திரி பதவிகள் மற்றும் மீண்டும் ஒரு எம்பி பதவி எனத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அடித்துள்ள இந்த தொடர் ஜாக்பாட்களை பார்க்கும்போது, இராஜதந்திர சூழ்ச்சிகளிலும், சந்தர்ப்பவாத அரசியல் லாபங்களை அறுவடை செய்வதிலும் மற்ற அனைத்து பிராந்திய கட்சிகளையும் காங்கிரஸ் கட்சி மிஞ்சிவிடும் போல தோன்றுகிறது. தங்களது வாக்கு வங்கி தமிழகத்தில் குறைவாக இருந்தபோதிலும், தேசிய கட்சி என்ற அந்தஸ்தையும், டெல்லி செல்வாக்கையும் பயன்படுத்தி தமிழகத்தின் இரு பெரும் மாற்றுச் சக்திகளிடமிருந்தும் தங்களுக்குத் தேவையான அதிகாரப் பங்கீட்டை மிகக் கச்சிதமாக அவர்கள் பெற்று விடுகிறார்கள். இத்தகைய காங்கிரசின் சாமர்த்தியமான நகர்வுகள் மற்ற தோழமைக் கட்சிகளுக்குப் பெரும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் இந்த இரண்டு வருட குறுகிய கால பதவியை காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்ததன் மூலம், தவெக அரசுக்கு எதிரான டெல்லி அரசியலின் அழுத்தத்தை குறைத்திருப்பதுடன், தனது கூட்டணி தர்மத்தையும் நிலைநாட்டியுள்ளார். அரசியல் அனுபவமே இல்லாதவர் என்று கேலி செய்த பழைய திராவிட தலைவர்களுக்கு மத்தியில், பதவி மற்றும் அதிகாரத்தை எப்படி சரியான நேரத்தில் பகடைக்காயாக பயன்படுத்த வேண்டும் என்பதை விஜய் நிரூபித்து காட்டியுள்ளார். தற்காலிகமாக ஒரு அடியை பின்னோக்கி வைத்து, எதிர்காலத்தில் இமாலய பாய்ச்சலை நிகழ்த்த போகும் முதலமைச்சரின் இந்த ராஜதந்திச் சாதுரியம் வரும் காலங்களில் தவெக-விற்கு பெரும் அரசியல் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
