தமிழ்நாட்டில் அண்மையில் திமுக நடத்திய Gen Z இளைஞர்கள் கூட்டம் சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரமாக மாறி, மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. புதிய தலைமுறை இளைஞர்களின் ஆதரவு தங்களுக்குத்தான் இருக்கிறது என்று உலகிற்கு காட்டிக் கொள்ள ஆசைப்பட்டு, அவசர அவசரமாக ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். ஆனால், அங்கே வந்திருந்தவர்களின் தோற்றத்தையும், மேடையில் அவர்கள் பேசிய பேச்சுகளையும் பார்த்த நிஜமான 2000-க்குப் பின் பிறந்த இளைஞர்கள், “டேய், நீங்களெல்லாம் ஜென்ஸி பசங்களா?” என்று நெற்றிக்கண்ணைத் திறந்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு, தலையில் டை அடித்து வந்துவிட்டால் தாங்கள் ‘ஜென் ஸி’ தலைமுறையாக மாறிவிடலாம் என்று நினைத்த சில முதியவர்களின் போலி வேஷத்தைக் கண்டு, உண்மையான இளைய தலைமுறை இன்று கடும் கொந்தளிப்பில் உள்ளது.
இந்தக் கூட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த Gen Z தலைமுறையையே உலகத்தின் முன்னால் கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்ற ஆதங்கம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. முற்போக்கு சிந்தனையும், நவீனத் தொழில்நுட்ப அறிவும், யாருக்கும் அடிபணியாத சுபாவமும் கொண்ட ஒரு சுதந்திரமான தலைமுறையை, மேடையில் ஏறி “நாங்கள் பெருமைமிக்க கொத்தடிமைகள்” என்று பேச வைத்ததுதான் இந்த நாடகத்தின் உச்சக்கட்ட காமெடி. தங்களின் அரசியல் லாபத்திற்காக, சுயசிந்தனையற்ற சில மனிதர்களை இளைய தலைமுறையின் பிரதிநிதிகள் என்று காட்டி, ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மீதும் ஒரு போலி பிம்பத்தைத் திணிக்க முயன்ற அரசியல் தந்திரம் தற்பொழுது அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.
அரசியல் மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறேன் என்று, யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைக் கூடச் ஒழுங்காகப் படிக்கத் தெரியாமல் மேடையிலேயே உளறிக்கொட்டியதுதான் அடுத்த நகைச்சுவை. “நீங்க வெட்ட வெட்ட ஈசியா எங்கள வெட்டி போடுற வாழமரம்னு நினைச்சியாடா? நாங்க வாழையடி வாழையா இருக்கக்கூடிய ஆலமரம்டா” என்று மைக் பிடித்துக் கத்திய வாலிபரின் அறியாமையைக் கண்டு தமிழ் ஆர்வலர்கள் தலைசுற்றிப் போயுள்ளனர். வெட்ட வெட்டத் தழைப்பதும், வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்குவதும் வாழை மரமே தவிர, விழுதுகளைக் கொண்ட ஆலமரம் கிடையாது என்ற சாதாரணப் பொது அறிவு கூட இல்லாமல், எழுதி வாங்கிக் கொண்டு வந்த பேப்பரை அப்படியே வாசித்துப் பஜனை பாடியுள்ளனர்.
இத்தகைய அரைகுறை டயலாக்குகளையும், போலித்தனமான ஆக்ரோஷங்களையும் மேடையில் அரங்கேற்றிவிட்டு, “நாங்கள்தான் Gen Z தலைமுறை” என்று சொன்னால், அதை இந்த தமிழ்நாட்டு மக்கள் அப்படியே நம்பிவிட வேண்டுமா என்ற தார்மீக கேள்வி எழுகிறது. சோசியல் மீடியாக்களில் தங்களின் சொந்த உழைப்பால், தனித்துவமான திறமைகளால் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிஜமான இளைஞர்கள் எங்கே, கட்சி ஆபீஸிற்குள் குளிரூட்டப்பட்ட அறையில் நாற்காலிகளை நிரப்ப வந்த 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் எங்கே என்று நெட்டிசன்கள் ஒப்பிட்டுக் காட்டி வருகின்றனர். அரசியல் நையாண்டிகளுக்கும், மேடை காமெடிகளுக்கும் ஒரு அளவில்லையா என்று சாமானிய மக்களே தற்பொழுது கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இன்றைய நிஜமான இளைஞர்கள் தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் மற்றும் நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து மிகவும் தீர்க்கமான சிந்தனைகளை கொண்டுள்ளனர். அவர்களை இதுபோன்ற போலி மேடை பேச்சுகளாலோ அல்லது ‘Gen Z’ என்ற ஒற்றை வார்த்தை கவர்ச்சியாலோ எளிதாக ஏமாற்றிவிட முடியாது. தாத்தா காலத்து அரசியல் பாணியை இன்னமும் கையில் வைத்துக் கொண்டு, இளைஞர்களின் மண்டையை கழுவலாம் என்று நினைப்பது ஆளுங்கட்சியின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியையும், அரசியல் பலவீனத்தையுமே காட்டுகிறது. உண்மையான கள நிலவரம் தெரியாமல், தங்களுக்குத் தாங்களே சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் இத்தகைய கூட்டங்கள், இளைஞர்களைக் கவர்வதற்குப் பதிலாக அவர்களிடம் மேலும் வெறுப்பையே உண்டாக்கும்.
முடிவாகப் பார்க்கும்போது, ‘Gen Z’ என்ற பெயரில் அரசியல் நடத்தி தங்களை இன்னும் இளைஞர்களாகக் காட்டிக் கொள்ள ஆசைப்படும் அந்த 80ஸ், 90ஸ் புள்ளிகளுக்கு மக்கள் சொல்லும் அறிவுரை ஒன்றே ஒன்றுதான். “வயசான காலத்துல வீணா மேட ஏறிக் கத்தாம, போயி சுகர் மாத்திரையைப் போட்டுட்டு நிம்மதியா படுத்துத் தூங்குங்கப்பா” என்ற சாட்டையடி விமர்சனமே தற்பொழுது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இனிமேலும் இத்தகைய போலி விர்ச்சுவல் கூட்டங்களை நடத்தித் தங்களை ஏமாற்ற நினைத்தால், நிஜமான இளைய தலைமுறை தங்களின் வாக்குரிமையின் மூலம் பழைய அரசியல் சிஸ்டத்திற்குப் தகுந்த பாடம் புகட்டும் என்பது மட்டும் நிச்சயம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
