வாக்கு எண்ணிக்கையே நடைபெறவில்லை.. அதற்குள் எந்த துறை அமைச்சர் என்ற போட்டியில் தவெக நிர்வாகிகள்.. மே 4ஆம் தேதி திடீரென ஆஸ்திரேலியா செல்லும் விஜய்.. என்ன தான் நடக்குது தவெகவில்?

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, தமிழக வெற்றிக் கழகத்தின் கூடாரத்தில் வெற்றி கொண்டாட்டங்கள் இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளன. வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்திருப்பது தங்களுக்கு சாதகமான ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள்…

vijay bussy

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, தமிழக வெற்றிக் கழகத்தின் கூடாரத்தில் வெற்றி கொண்டாட்டங்கள் இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளன. வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்திருப்பது தங்களுக்கு சாதகமான ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் அதீத நம்பிக்கையில் உள்ளனர்.

சுமார் 180 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் என்று தவெக-வின் மூத்த நிர்வாகிகள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அதீத நம்பிக்கையின் உச்சமாக, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அமைச்சரவை பட்டியலைத் தயார் செய்யும் பணிகளிலும் அவர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

அமைச்சரவையில் யாருக்கு இடம், எந்தத் துறை யாருக்கு என்பது குறித்த விவாதங்கள் அக்கட்சிக்குள் ஒரு பட்டிமன்றமாகவே உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிக வருவாய் மற்றும் அதிகாரம் கொண்ட துறைகளான கனிம வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை ஆகியவற்றைக் கைப்பற்ற வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், தான் தேர்தலுக்காக செய்த செலவுகளைக் கணக்குக் காட்டி, பால்வளத்துறையை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று இப்போதே கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளார்.

இன்னொரு பக்கம், சென்னையில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரோ, விளையாட்டுத் துறை அல்லது சிறுபான்மையினர் நலன் போன்ற துறைகளை தமக்குக் கொடுத்துவிடாதீர்கள் என்று வெளிப்படையாகவே முணுமுணுத்து வருகிறார். அவருக்கு அதிகாரம் மிக்க ‘பவர்ஃபுல்’ துறைகள் வேண்டும் என்பதுதான் விருப்பமாம்.

இவ்வாறு வெற்றிக்கு முன்பே இலாக்காக்களுக்காக வேட்பாளர்கள் மல்லுக்கட்டுவது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரங்களை கையாளுவதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

கட்சிக்குள் நீண்டகாலமாக இருக்கும் ‘விஜய் மக்கள் மன்ற’ நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிப்பதா அல்லது தேர்தல் நேரத்தில் கட்சியில் இணைந்த புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிப்பதா என்ற குழப்பம் மேலோங்கியுள்ளது.

இதற்கிடையில், மே 8-ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால், அன்றைய தினமே பதவியேற்பு விழாவை நடத்திவிடலாம் என்பது வரை திட்டமிட்டு வைத்துள்ளனர். இவ்வாறு ஒருபுறம் நிர்வாகிகள் கோட்டை கட்டி கொண்டிருக்க, மறுபுறம் அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்த ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி இரவே, விஜய் ஆஸ்திரேலியா செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆட்சியை பிடித்து முதல்வராக போகிறேன் என்று சொல்பவர், முடிவுகள் வரும் அன்றே ஏன் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார் என்பது தொண்டர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக வராது என்று அவர் கணிக்கிறாரா அல்லது தனிப்பட்ட பயணமா என்ற குழப்பம் நீடிக்கிறது. நிர்வாகிகளின் அதீத எதிர்பார்ப்பிற்கும், தலைவரின் இந்தத் திடீர் பயண திட்டத்திற்கும் இடையே தவெக-வின் அரசியல் நகர்வுகள் தற்போது பெரும் மர்மமாகவே உள்ளன.