தமிழக அரசியல் களத்தில் தற்போது அரங்கேறி வரும் வார்த்தை போர்கள், ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததாக இல்லை என்பதுதான் நடுநிலையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை சிறுமைப்படுத்தும் விதமாக தரக்குறைவான விமர்சனங்களை முன்வைப்பது அரசியல் நாகரிகத்தின் எல்லையை தாண்டுவதாக உள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பாரம்பரியம் கொண்ட ஒரு பேரியக்கத்தின் வழித்தோன்றல்கள், கொள்கை ரீதியான விமர்சனங்களை விடுத்து, தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது. தேர்தல் நேரத்து ஆவேசம் என்பது ஒருபுறம் இருந்தாலும், பொதுவெளியில் பேசும் சொற்கள் பிற்காலத்தில் எப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கும் என்பதை தலைவர்கள் உணர தவறிவிடுகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுப்பதாகக் கருதி, எடப்பாடி பழனிசாமி அவர்களும் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவகாரங்களை நோக்கி தனது விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ளார். பொதுவாக யாரையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசாதவர் என்று பெயரெடுத்த எடப்பாடியாரையே இத்தகைய நிலைக்கு தள்ளியது திமுகவினரின் தொடர் சீண்டல்களே என்று அதிமுக தரப்பு வாதிட்டாலும், ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் அவரும் நிதானத்தை கடைப்பிடித்திருக்கலாம் என்பதே நடுநிலையாளர்களின் பார்வையாக உள்ளது. ஒருவரை ஒருவர் நோக்கி வீசப்படும் இந்த ரத்தமும் சதையுமான விமர்சனங்கள், தமிழக அரசியலில் ஒரு இருண்ட காலத்தை தொடங்கி வைத்துள்ளதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தேர்தல் களத்தில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் வந்து போகக்கூடிய ஒன்றுதான்; ஆனால், ஒரு தலைவரின் மீது மக்கள் வைத்துள்ள மரியாதையும் கண்ணியமும் ஒருமுறை சிதைந்துவிட்டால், அதை மீண்டும் சம்பாதிப்பது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இரு திராவிட கட்சிகளும் தங்களது நிர்வாக திறமையையோ அல்லது மக்கள் நலத்திட்டங்களையோ முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பதை விடுத்து, ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைப்பதிலேயே குறியாக உள்ளனர். இந்த அரசியல் வன்மம் மேடை பேச்சோடு முடிந்துவிடாமல், அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் ஒரு கசப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இத்தகைய தரம் தாழ்ந்த விவாதங்கள், புதிய தலைமுறை வாக்காளர்களை அரசியலில் இருந்தே அந்நியப்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.
“சொன்னதைச் செய்வோம்” என்றும், “திராவிட மாடல்” என்றும் முழங்கும் திமுக, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு கேட்க வேண்டியதுதானே? அதை விடுத்து, எதிர்க்கட்சி தலைவரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது தங்களது தோல்விகளை மறைப்பதற்கான ஒரு தந்திரமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதேபோல், அதிமுகவும் ஆளுங்கட்சியின் தவறுகளை ஆதாரங்களுடன் மக்களிடம் கொண்டு செல்வதை விட்டுவிட்டு, குடும்ப அரசியல் விமர்சனங்களுக்குள் சிக்கிக்கொள்வது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளுமே தங்களது கண்ணியத்தை இழந்து நிற்கும் இந்த சூழலில், தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கிச் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவென்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் “விடியல்” என்றும், “மீட்பு” என்றும் வாக்குறுதி அளிக்கும் இரு திராவிட கட்சிகளும், உண்மையில் மக்களின் நிம்மதியான வாழ்வை பற்றி சிந்திப்பதில்லை என்பது இந்த பிரச்சார களத்தை பார்த்தாலே புரிகிறது. இவர்களது ஆதிக்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாகரிகமான மற்றும் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்வைக்கும் மாற்று சக்திகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற ஆவேசம் நடுநிலையாளர்கள் மத்தியில் பரவலாகத் தெரிகிறது. மரியாதை இல்லாத அரசியலும், தரமற்ற விமர்சனங்களும் தமிழகத்தை எங்கே கொண்டு செல்லும் என்பதை உணர்ந்து, மக்கள் இந்த முறை சரியான பாடத்தை புகட்ட வேண்டும். இரு திராவிடக் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஒரு புதிய விடியலை உருவாக்குவதே தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
