தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போதே ஒரு மிகப்பெரிய இலவச போர்க்களமாக மாறியுள்ளது. ஆளும் திமுக அரசு மகளிருக்கு வழங்கி வரும் உரிமைத்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் தங்களுக்கு போதிய வெற்றியை தரும் என்று நம்பியிருந்த வேளையில், எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒரு அதிரடி அறிவிப்பு அறிவாலயத்தையே அதிரவைத்துள்ளது. அரிசி அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ‘இலவச ஃபிரிட்ஜ்’ வழங்கப்படும் என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, அடிமட்ட மக்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவியுள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கை, ஆளுங்கட்சி தலைமையைத் திடுக்கிட செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, இந்த ஃபிரிட்ஜ் அறிவிப்பு கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் அதிமுகவின் செல்வாக்கை மளமளவென உயர்த்தியுள்ளது. குடும்பத்திற்கு பணம் கொடுப்பதை விட, ஒரு பொருளாக கொடுப்பது பெண்களின் மனதில் ஆழமாக பதிகிறது” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கோடைக்காலம் நெருங்கும் வேளையில் குளிர்சாதன பெட்டி என்ற அறிவிப்பு சாதாரண மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் கலக்கமடைந்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் இந்த ‘ஃபிரிட்ஜ் கார்டை’ முறியடிக்க என்ன செய்யலாம் என்று தனது ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிமுகவின் அறிவிப்பை விடவும் ஒரு படி மேலே போய், மக்களுக்கு தேவையான பொருட்களை அவர்களே தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க திமுக தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்தாத குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ‘மின்னணு கூப்பன்’ வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அரசு கொடுக்கும் பொருளை மட்டும் வாங்காமல், மக்கள் தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் அல்லது மைக்ரோவேவ் அவன் போன்ற வீட்டு உபயோக பொருட்களை இந்த கூப்பனை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம்.
இந்த மின்னணு கூப்பன் முறை என்பது தொழில்நுட்ப ரீதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்று திமுக தரப்பு நம்புகிறது. குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் தங்களுக்கு பிடித்தமான தரமான பொருட்களை மக்கள் தேர்வு செய்யும் சுதந்திரம் இதில் இருப்பதால், பழைய காலத்து ‘தரமற்ற இலவச பொருட்கள்’ என்ற விமர்சனத்தை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பால் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டவும், நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளை தக்கவைக்கவும் இந்த 8,000 ரூபாய் கூப்பன் திட்டம் ஒரு பிரம்மாண்டமான ஆயுதமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி இலவசங்களை அள்ளி வீசுவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து வரும் வேளையில், வாக்குகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பது மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் கொள்கைகளை விட கவர்ச்சி திட்டங்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக மாறுவது தமிழக அரசியலில் வாடிக்கையாகிவிட்டது.
இறுதியாக, தமிழக மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் எடப்பாடி பழனிசாமியின் ‘ஃபிரிட்ஜ்’ வெல்லுமா அல்லது ஸ்டாலினின் ‘மின்னணு கூப்பன்’ வெல்லுமா என்பது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அதிமுக தனது பழைய செல்வாக்கை மீட்க போராடுகிறது, மறுபுறம் திமுக தனது ஆட்சியை தக்கவைக்க எத்தகைய அறிவிப்பையும் வெளியிட தயாராக உள்ளது. இந்த இலவச போட்டியில் உண்மையான பயன் மக்களுக்கு கிடைக்குமா அல்லது இது வெறும் தேர்தல் காலத்து மாயையா என்பது 2026 தேர்தல் முடிவுகளுக்கு பின்பே தெரியவரும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
