ஞானியர்கள் திருவண்ணாமலை செல்வது ஏன்? இவ்ளோ விசேஷம் இருக்கா?

திருவண்ணாமலை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது கிரிவலம் தான். பலரும் இன்று பொழுதுபோக்காக ஜாலியா டூர் மாதிரி போறாங்க. இறையருளைப் பெற நாம முழுமையான இறைசிந்தனையுடன் நமசிவாயம் நாமம் சொல்லியபடி செல்வது சிறப்பு. தேவையற்ற…

திருவண்ணாமலை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது கிரிவலம் தான். பலரும் இன்று பொழுதுபோக்காக ஜாலியா டூர் மாதிரி போறாங்க. இறையருளைப் பெற நாம முழுமையான இறைசிந்தனையுடன் நமசிவாயம் நாமம் சொல்லியபடி செல்வது சிறப்பு. தேவையற்ற பேச்சுகளையும், வீண்விவாதங்களையும் பேசுவது நாம் கிரிவலம் செல்லும் நோக்கத்தையே சிதறடித்து விடும்.

அதனால் இதுபோன்ற புனித தலங்களில் யாத்திரை மேற்கொள்பவர்கள் இந்த தருணத்திலாவது இறையருளைப் பெற வேண்டுமே என்ற தாகத்துடன் சிவசிந்தனையுடன் செல்வது சிறப்பு. வாங்க திருவண்ணாமலையாரின் சந்நதிக்குள் இருக்கும் அந்த சிறப்பு என்னன்னு பார்ப்போம்.

ஆற்றல் வாய்ந்த காந்த மலை இது. அற்புதமான அருளைத் தரக்கூடிய நெருப்பு மலையாகக் காட்சி அளிக்கிறது. அருணம் என்றால் சிவப்பு. சிவப்புன்னா நெருப்பு பிழம்பு. சலம் என்றால் மலை. அப்பேர்ப்பட்ட மலை இன்று கல் மலையாக நாம் எல்லாம் அருகே சென்று இறைவனின் அருள் ஆற்றலைப் பெறக்கூடிய மலையாக அமைந்துள்ளது. அண்ணாமலையாரின் சந்நதிக்குள் சென்றால் உள்ளே இருந்து அக்னி காற்று நம் உடல் மீது படும் அனுபவத்தை உணரலாம்.

இன்றைக்கும் சுவாமி கருவறைக்குள் அக்னியின் சொரூபமாகத்தான் காட்சி தருகிறார். மனித இயக்கம் உள்ளே இருக்கும் ஜாலராக்கினி என்ற அக்னியின் தன்மையால் இயங்குகிறது. உள்ளே இருப்பதும் அக்னி. வெளியே உள்ள பஞ்சபூதங்களில் இருப்பதும் அக்னி. இந்த அக்னியின் தன்மை சரியாக இருக்கணும்னா பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி தலத்தில் சென்று நாம் தவம் செய்தால் குண்டலினி யோகம் மேலோங்கி அவர்கள் ஞானநிலையை அடைய அந்த தலம் துணை செய்யும். அதனால்தான் ஞானியர்கள் எல்லாம் அந்தத் தலத்தை தேடி வருகிறார்கள்.

இது உடல் ரோகங்களை நீக்கக்கூடியது. நோய்களை நீக்கக்கூடியது. சகலவிதமான நன்மைகளைத் தரக்கூடியது. மன அமைதியைத் தருகிறது. நடக்கவே முடியாதவர்கள் மலையை மட்டும் பார்த்தபடி அமைதியாக 1 மணி நேரம் உட்காருங்கள். கண்டிப்பாக அண்ணாமலையார் நிச்சயம் நமக்குள் ஒரு நல்ல மாற்றத்தைத் தருவார்.