அமெரிக்காவின் உலகளாவிய வல்லமை என்பது வெறும் அதன் ராணுவ வலிமையிலோ அல்லது அதிநவீன ஏவுகணைகளிலோ மட்டும் அடங்கியிருக்கவில்லை; அதன் உண்மையான பலம் ‘டாலர்’ எனும் அதன் கரன்சியில் தான் உள்ளது. உலக நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்யும் போது, அது பெட்ரோலாக இருந்தாலும் சரி அல்லது பிற பொருட்களாக இருந்தாலும் சரி, அமெரிக்க டாலரை பயன்படுத்தியே பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இந்த ‘பெட்ரோ-டாலர்’ ஆதிக்கமே அமெரிக்காவை உலக பொருளாதாரத்தின் எஜமானராக அமர வைத்துள்ளது. ஆனால், தற்போது ஈரான் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு, அமெரிக்காவின் இந்த பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் ஒரு கூர்மையான ஆயுதமாக மாறியுள்ளது.
ஈரான் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாக செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் டாலருக்கு பதிலாக சீன கரன்சியான ‘யுவான்’ மூலம் வர்த்தகம் செய்திருந்தால், அவற்றிற்கு எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பான பாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒருவேளை டாலரில் வர்த்தகம் செய்யப்பட்டிருந்தால், அந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மறைமுக எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது. உலக எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கும் இப்பகுதியில், ஈரான் எடுத்துள்ள இந்த பொருளாதார போர் வியூகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா இந்த தாக்குதலைத் தொடங்கிய போது, சில ஏவுகணைகளை வீசி ஈரானின் அதிகார மையங்களை தகர்த்துவிட்டால், அந்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணக்கு போட்டது. ஆனால், ஈரான் தற்போது ஒரு ‘பொருளாதார போரை முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாய் போன்ற நாடுகளின் பொருளாதார உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலரை தொடும் போது தான் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் என்பதை ஈரான் நன்கு உணர்ந்துள்ளது. இதற்கேற்ப எண்ணெய் விலையும் தற்போது 100 டாலரை தாண்டி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சீனாவை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் மிகவும் நிதானமான மற்றும் முதிர்ச்சியான போக்கை கையாள்கிறது. ஈரானின் இந்த அறிவிப்பிற்கு சீனா வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவிக்கவில்லை என்றாலும், திரைமறைவில் ஈரானுக்கு சீனாவின் முழுமையான ஆசிர்வாதம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை என சீன பேராசிரியர்கள் மூலம் மழுப்பலான பதில்களை சீனா வெளியிட்டாலும், டாலர் ஆதிக்கத்தை வீழ்த்த இது ஒரு பொன்னான வாய்ப்பு என்பதை சீனா நன்கு அறியும். டாலருக்கு பதிலாக யுவானை உலகளாவிய வர்த்தக கரன்சியாக மாற்ற வேண்டும் என்ற சீனாவின் நீண்டகால கனவிற்கு ஈரான் தற்போது களம் அமைத்து கொடுத்துள்ளது.
ஈரானின் இந்த தந்திரமான நகர்வு உலக நாடுகளை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தங்களது கப்பல்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, பல நாடுகள் இப்போது சீனாவை அணுக தொடங்கியுள்ளன. சீனாவோடு வர்த்தகம் செய்து அந்நாட்டின் கரன்சியை பயன்படுத்தினால் ஈரானின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது. போர் தொடங்கி 15 நாட்களே ஆன நிலையில், ராணுவ ரீதியான இழப்புகளை விட, டாலர் மீது விழுந்த இந்த அடி அமெரிக்காவை நிலைகுலைய செய்துள்ளது.
இறுதியாக, ஈரான் என்பது வெனிசுலா அல்லது கியூபா போன்ற சாதாரண நாடு அல்ல என்பதை அமெரிக்கா தற்போது உணர தொடங்கியுள்ளது. டொனால்ட் டிரம்ப் எதிர்பார்த்ததை போல ஒரு சில நாட்களில் முடிந்துவிடக்கூடிய போர் இதுவல்ல; இது பல மாதங்கள் நீடிக்கக்கூடிய ஒரு நீண்டகால போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஈரானின் இந்த யுவான் வியூகம் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். ராணுவ வலிமையால் மட்டுமே ஒரு நாட்டை அடிபணிய வைத்துவிட முடியாது என்பதையும், பொருளாதார ரீதியாக ஒரு வல்லரசை எப்படி சீண்ட முடியும் என்பதையும் ஈரான் உலகிற்கு நிரூபித்து கொண்டிருக்கிறது. 2026-ன் இந்த அரசியல் நகர்வுகள் உலக பொருளாதாரத்தின் புதிய வரலாற்றை தீர்மானிக்க போகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
