உலகப்புகழ் பெற்ற பிரிட்னி ஸ்பியர்ஸ் திடீர் கைது.. ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி.. குடிபோதையில் காரை ஓட்டினாரா? குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனைக்கு வாய்ப்பு.. போக்குவரத்து விதியை மீறுவது இது முதல் முறையல்ல.. ஏற்கனவே மூன்று முறை புகாருக்கு உள்ளானவர்..!

உலகப்புகழ் பெற்ற பாப் இசை நட்சத்திரமான பிரிட்னி ஸ்பியர்ஸ், கலிபோர்னியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஞ்சுரா கவுண்டியில் கலிபோர்னியா நெடுஞ்சாலை…

Britney spears

உலகப்புகழ் பெற்ற பாப் இசை நட்சத்திரமான பிரிட்னி ஸ்பியர்ஸ், கலிபோர்னியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெஞ்சுரா கவுண்டியில் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து படையினரால் அவர் காவலில் எடுக்கப்பட்டார். 44 வயதான இவர் சமீபகாலமாகவே பொது இடங்களில் சற்று விசித்திரமாக நடந்து கொள்வதாகவும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதாகவும் புகார்கள் எழுந்து வந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்று அதிகாலை அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பிரிட்னி ஸ்பியர்ஸ் வரும் மே மாதம் 4-ம் தேதி திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கலிபோர்னியா சட்டப்படி, ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவரது ஓட்டுநர் உரிமம் தானாகவே ரத்து செய்யப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும். இது தவிர, அவருக்கு 1,000 டாலருக்கும் அதிகமான அபராதமும், சிறைத்தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

பிரிட்னி ஸ்பியர்ஸ் வாகனம் ஓட்டும் போது விதிகளை மீறுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது மெர்சிடிஸ் காரை ஓட்டி சென்ற போது, கலிபோர்னியாவின் போக்குவரத்து சட்டத்தை மீறி செல்போனில் பேசிக்கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அப்போது அவர் மீது அதிகாரப்பூர்வமாக வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றாலும், அவரது பாதுகாப்பற்ற ஓட்டுநர் முறை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த சில மாதங்களாகவே பிரிட்னி ஸ்பியர்ஸ் நெடுஞ்சாலைகளில் தவறான பாதையில் காரை ஓட்டிச் செல்வதும், பொது இடங்களில் நிலையின்றி நடந்து கொள்வதும் கேமராக்களில் பதிவாகியுள்ளன.

பிரிட்னியின் கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 2007-ம் ஆண்டு ஒரு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மோதிவிட்டுச் சென்றதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கியதை தொடர்ந்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதேபோல், 2008-ம் ஆண்டு முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு கடுமையான சட்டச்சிக்கலில் அவர் சிக்கியிருப்பது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.