2026 மாசி மகத்துடன் சந்திர கிரகணமும் இணைந்து வருகிறது. இதுபற்றி வாங்க பார்க்கலாம்.
இறைவன் பஞ்சபூதங்களிலும் நிறைந்துள்ளார். அதனால்தான் சிவபெருமானின் திருக்கோவில்களில் கூட பஞ்சபூத தலங்கள் என்று ஒரு அற்புதமான வழிபாட்டு முறையைப் பெரியவங்க வச்சிருக்காங்க. எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்துள்ளார். என்றாலும் நீர் நிலைகளில் இறைவனை விசேஷமாக எழுந்தருளச் செய்து அன்று அந்த இடத்தில் இருந்து நாம் அந்த தெய்வங்களை வழிபாடு செய்வதன்மூலமாக நமக்கு அதிவிசேஷ பலன் கிடைக்கிறது. இதுதான் மாசிமகத்தின் தத்துவம்.
பொதுவாக நாம் புனித தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது நம் பாவங்களைப் போக்குவதற்காகத் தான். புண்ணியத்தை சேர்ப்பதற்காக. இது கடலுக்கும், புண்ணிய நதிகளுக்கும் பொருந்தும்.
ஆனா பாவம் பண்றதையே தொழிலாக வைத்தவன் போய் மாசி மகத்துல நீராடினால் அவனது பாவம் போய்விடுமா என்ற சந்தேகம் எழும். உண்மையாக வாழ்ந்து உண்மையான தெய்வபக்தியுடன் மனதில் எந்தவித அழுக்கும் இல்லாது தெய்வ வழிபாடு செய்வதுதான் இயற்கை. ஆனால் இன்று அது எல்லாமே மாறிப்போச்சு. இந்தக் காலத்துல அதை எதிர்பார்க்குறது கஷ்டம்.
நமது மனதிற்குள் சுத்தமான எண்ணம் ஏற்பட்டு அப்பழுக்கற்ற மனமாக இருந்தால் தான் புனித நீர்நிலைகளில் நீராடும்போது நமது பாவங்கள் நம்மை விட்டுப் போகிறது. சும்மா குளித்து விட்டால் மட்டும் போய்விடாது. இந்த அற்புதமான மாசி மகம் வரும் 2.3.2026 அன்று வருகிறது.
திருக்கோஷ்டியூரில் மாசி மகத்தையொட்டி தெப்போற்சவம் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டு 3.3.2026 அன்று சந்திரகிரகணம் மதியம் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை இருக்கிறது. அதனால் திருக்கோஷ்டியூரில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை நடை சாத்தப்படும். இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறும்.





