“எல்லாரும் கூட்டணிக்கு ஆள் பிடிக்கிறாங்க.. ஆனா இங்கே மோடி வர்றார்னு சொன்ன உடனே, மொத்த தமிழகமும் திரளுது.. இதுதான் ‘மோடி மேஜிக்’! ஒரு பக்கம் ராகுல்-ஸ்டாலின்.. இன்னொரு பக்கம் மோடி-எடப்பாடி! மகாபாரத போர் மாதிரி 2026 தேர்தல் அமையப்போகுது.. பிரேமலதா மேடை ஏறினா கூட்டணி கெத்தாகும், எடப்பாடியும் மோடியும் இணைஞ்சா தமிழகம் ‘மாஸாகும்’!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் பலப்பரீட்சை வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தின் மூலம் தொடங்குகிறது. இந்த பொதுக்கூட்டம் வெறும் தேர்தல் பிரச்சாரத்…

nda 2

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் பலப்பரீட்சை வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தின் மூலம் தொடங்குகிறது. இந்த பொதுக்கூட்டம் வெறும் தேர்தல் பிரச்சாரத் தொடக்கம் மட்டுமல்லாமல், கூட்டணியின் அதிகாரப்பூர்வ பலத்தை உலகிற்கு பறைசாற்றும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தியபடி, இந்த கூட்டத்தில் கூட்டணியின் அனைத்து முக்கிய தலைவர்களும் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இந்த கூட்டணியை முன்னின்று வழிநடத்த, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கைகோர்த்துள்ளன. இவர்களுடன் புதிய வரவாக தெற்கு மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க டிடிவி தினகரன்வருகையும் மேடையில் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 23-ஆம் தேதி மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பிரதானமாக இடம்பெறுவர். இவர்களுடன் கூட்டணிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், புதிய தமிழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் தனியரசு போன்ற தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடியுடன் ஒரே மேடையில் தோன்றுவது, அதிமுகவின் பிளவுபட்ட வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள் இதற்கான சமரச பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை பொறுத்தவரை, அவர் தனது கட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடைசி நிமிடம் வரை தொகுதி பங்கீடு மற்றும் கெளரவமான இடங்களுக்காக பேரம் பேசுவார் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. இதுவரை எந்த கூட்டணியிலும் இணையாமல் ‘தனித்துவத்தை’ நிலைநாட்டி வரும் தேமுதிக, கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் மட்டுமே என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. 23-ஆம் தேதி மேடையில் அவர் பங்கேற்பது என்பது, அந்த கட்சிக்கு அளிக்கப்படும் ‘மதிப்புமிக்க’ வாக்குறுதிகளை பொறுத்தே அமையும். ஒருவேளை தேமுதிக இக்கூட்டணியில் இணையும் பட்சத்தில், அது வடதமிழகத்தில் திமுகவிற்கு பெரும் சவாலாக மாறும்.

மறுபுறம், திமுக தனது தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் மிக தெளிவாகவும் சுறுசுறுப்பாகவும் பூத் கமிட்டி வேலைகளில் இறங்கிவிட்டது. அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட என்டிஏ கூட்டணித் தலைவர்கள் மேடை ஏறித் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மட்டும் சற்று மந்தமான நிலையில் இருப்பதாக தெரிகிறது. விஜய் தனது மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்தி வந்தாலும், மற்ற கட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இன்னும் ஒரு தெளிவான தேர்தல் வியூகத்தையோ அல்லது கூட்டணி முடிவுகளையோ அறிவிக்கவில்லை. இது தவெக தொண்டர்களிடையே ஒருவித சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை, 23-ஆம் தேதி பொதுக்கூட்டமே அவர்களது பிரச்சாரத்தின் உச்சகட்டமாக அமையும். அந்த மேடையில் யார் யாரெல்லாம் இடம்பெறுகிறார்கள் என்பதுதான் 2026 தேர்தலின் இறுதி நிலவரமாக இருக்கும். தொகுதி பங்கீட்டில் சிறுசிறு மாற்றங்கள் இருந்தாலும், பிரதமர் மோடியுடன் மேடை ஏறுபவர்களே இறுதி வேட்பாளர்களை முடிவு செய்யும் சக்திகளாக இருப்பார்கள். இந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் என்டிஏ கூட்டணி அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கும். பாஜகவின் தேர்தல் வியூகம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் கள அனுபவம் இரண்டும் இணைந்து திமுகவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் எனத் தெரிகிறது.

மொத்தத்தில், 2026 சட்டமன்ற தேர்தலானது திமுக, அதிமுக-பாஜக கூட்டணி, மற்றும் விஜய்யின் தவெக என ஒரு முக்கோண அல்லது நாம் தமிழர் கட்சியை சேர்த்து நான்கு முனை போட்டியாக உருவெடுத்துள்ளது. 23-ஆம் தேதிக்கு பிறகு தமிழக அரசியல் களம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும். ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் கூட்டணி ஒருபுறமும், மோடி மற்றும் எடப்பாடி கூட்டணி மறுபுறமும் நேருக்கு நேர் மோதும் போது, நடுநிலை வாக்காளர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

வரும் நாட்களில் அதிமுகவின் உள்கட்சி பூசல்கள் மற்றும் தேமுதிகவின் இறுதி முடிவு ஆகியவை தமிழக அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.