பயங்கரவாதம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது முகமூடி அணிந்த, கையில் துப்பாக்கி ஏந்திய ஆண்களின் உருவம் தான். ஆனால், சமீபகாலமாக இந்த பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகள் பெண்களுக்கு என தனிப்பிரிவுகளை உருவாக்கி, அவர்களை தங்களின் நோக்கங்களுக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளன. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய டாக்டர் ஷாஹீனா போன்றவர்கள் இதற்கு சாட்சி. ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகள் இந்தியாவில் தங்களின் பெண் பிரிவை வலுப்படுத்தி வருவதை பகிரங்கமாக அறிவித்துள்ளன. இது வெறும் உணர்ச்சிவசப்பட்ட மாற்றம் அல்ல, மாறாக பாதுகாப்பு அமைப்புகளின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு மிக நுணுக்கமான உத்தி.
பெண்கள் பொதுவாக சமூகத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதப்படுகிறார்கள். பாதுகாப்பு சோதனைகளின் போது அவர்கள் மீதான கண்காணிப்பு ஆண்களை விட குறைவாகவே இருக்கும். இந்த ‘சந்தேகமற்ற தன்மையை’ பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில், பாதுகாப்பு படையினர் வீடுகளுக்குள் இருக்கும் பெண்களின் உரையாடல்களை கண்காணிக்க முடியாது என்பதை அறிந்து, பயங்கரவாத அமைப்புகள் பெண்களை தகவல் தொடர்பாளர்களாகவும், ஆயுதங்களை கடத்துபவர்களாகவும் பயன்படுத்தி வருகின்றன. இது ஒருவகையில் பெண்களின் சமூக நிலையை ‘ஆயுதமாக்கப்பட்ட பலவீனம்’ எனலாம்.
முன்பெல்லாம் பெண்கள் பயங்கரவாத அமைப்புகளில் வெறும் ‘சித்தாந்த பரப்புரையாளர்களாக’ மட்டுமே இருந்தனர். அதாவது, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஆண்களுக்கும் ஜிகாத் குறித்து போதிப்பது அவர்களின் பணியாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. துஹ்தரான்-இ-மில்லத் போன்ற அமைப்புகள் பெண்களுக்கு களப்பயிற்சிகளையும், துப்பாக்கி சுடும் பயிற்சிகளையும் வழங்கத் தொடங்கியுள்ளன. நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைன் ஜிகாத் வகுப்புகள் நடத்தப்பட்டு, பெண்களின் மனநிலை மாற்றப்படுகிறது.
பெண்கள் ஏன் இத்தகைய ஆபத்தான பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு, ‘ஏஜென்சி’ அல்லது ‘தனித்தன்மை’ என்ற உளவியல் காரணியே விடையாக அமைகிறது. சமூகத்தில் எவ்வித அங்கீகாரமும் இல்லாமல், வீட்டு சுவர்களுக்குள் முடங்கி கிடக்கும் பெண்களுக்கு, “நீங்கள் ஒரு பெரிய மதப்போரின் முக்கிய பங்குதாரர்” என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் போது, அவர்கள் தங்களை முக்கியமானவர்களாக கருதுகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் இந்த போலி அங்கீகாரம், அவர்களை உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு தூண்டுகிறது. உண்மையில் இதுவும் ஒரு ஆணாதிக்க கட்டமைப்புதான்; ஆண்கள் எப்போது பெண்களை வீட்டுக்குள் இருக்க சொல்கிறார்களோ அப்போது இருக்கிறார்கள், எப்போது வெளியே வந்து போரிட சொல்கிறார்களோ அப்போது வருகிறார்கள்.
குடும்ப பின்னணியும் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. பயங்கரவாத தலைவர்களின் சகோதரிகள் அல்லது மனைவிகள் இந்த அமைப்புகளை முன்னின்று நடத்தும்போது, அது மற்ற பெண்களுக்கு ஒருவித நம்பிக்கையை அளிக்கிறது. உதாரணமாக, மசூத் அசாரின் சகோதரி சாதியா அசார் போன்றவர்கள் பெண்கள் பிரிவை தொடங்குவது, அந்த அமைப்பிற்குள் இருக்கும் பெண்களிடையே ஒரு ‘நம்பிக்கையான வலையமைப்பை’ உருவாக்குகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்த பெண்கள் எளிதில் இத்தகைய அமைப்புகளால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவியும், எதிர்காலத்தை பற்றிய பொய்யான வாக்குறுதிகளும் அளிக்கப்படுகின்றன.
இந்த அபாயத்தை தடுக்க வேண்டுமானால், ‘பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு’ என்ற கருத்தாக்கத்தை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க முற்படாதபோது ஏற்படும் ‘வெற்றிடத்தை’ இத்தகைய பயங்கரவாத அமைப்புகள் ஆக்கிரமிக்கின்றன. இளைஞிகள் மற்றும் வளர்ந்து வரும் சிறுமிகளுக்கு முறையான விழிப்புணர்வு மற்றும் கல்வி அளிப்பதன் மூலம் மட்டுமே இந்த நச்சு சூழலை வேரறுக்க முடியும். பெண்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை தேச கட்டமைப்பில் உறுதி செய்தால் மட்டுமே, அவர்கள் இத்தகைய அழிவுப்பாதையை நோக்கித் திரும்புவதை தடுக்க முடியும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
