வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டாக்கா புறநகர் பகுதியில் நடந்த அரசு நிலத் திட்டம் தொடர்பான ஒரு ஊழல் வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதே வழக்கில் ஹசீனாவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஹசீனாவின் மருமகளும், பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி எம்.பி-யுமான துலிப் சித்திக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹசீனாவின் சகோதரியும், சித்திக்கின் தாயாருமான ஷேக் ரெஹானாவுக்கு இந்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரபியுல் ஆலம் வழங்கிய இந்த தீர்ப்பின்படி, பூர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில் நில ஒதுக்கீட்டில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது. துலிப் சித்திக் தனது தாயாருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும்படி ஹசீனாவை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த மூவர் மீதான வழக்கும் அவர்கள் நாட்டிலேயே இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சியில், ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்ந்த பிறகு அவர் வங்கதேசத்திலிருந்து தப்பி சென்று இந்தியாவில் வசித்து வருகிறார். துலிப் சித்திக் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
சட்ட ரீதியாக ஹசீனாவுக்கு பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நவம்பர் 27-ஆம் தேதியன்று, ராஜுக் நியூ டவுன் திட்டம் தொடர்பான மூன்று தனித்தனி ஊழல் வழக்குகளில், ஹசீனாவுக்குத் தலா 7 ஆண்டுகள் வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மற்றொரு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் போது “மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” அவருக்கு 10 நாட்களுக்கு முன்னதாக தனித் தீர்ப்பாயம் ஒன்று மரண தண்டனை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று ஷேக் ஹசீனா கூறி வருகிறார். இருப்பினும், இந்த தொடர் தண்டனைகளை சுட்டிக்காட்டி, இடைக்கால வங்கதேச அரசாங்கம் ஹசீனாவை இந்தியாவிடம் இருந்து நாடு கடத்த கோரும் தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
