அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தற்போதுள்ள அரசியல் களத்தில் தனது பிரதான எதிரியை தேர்ந்தெடுப்பதில் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நேற்று கோபியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஈபிஎஸ் அவர்களின் பேச்சு, ஒரு முக்கியமான வரலாற்று பிழையை அவர் மீண்டும் செய்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஈபிஎஸ் அவர்கள் ஆளும் கட்சியான திமுகவை விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த உத்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது கட்சியின் ஆரம்ப காலத்தில் செய்த அதே தவறை நினைவுபடுத்துவதாக உள்ளது. 1994ல் மதிமுகவை தொடங்கிய வைகோ, 1996 தேர்தலில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை தனது முதல் இலக்காக வைத்திருக்க வேண்டிய சூழலில், பெரும்பாலான பொதுக்கூட்டங்களில் கருணாநிதியையும், திமுகவையும் மட்டுமே விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருந்த மக்கள், ஆளும் கட்சியை விமர்சிக்காமல் தன்னை கட்சியில் இருந்து வெளியேற்றினார் என்ற காரணத்திற்காக திமுகவை விமர்சிக்கிறார், இவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை, தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளையே பேசுகிறார் என வைகோவை மக்கள் ஒதுக்கினர். இதன் விளைவாக, ஆளும் கட்சியின் மீதான கடுமையான விமர்சனத்தை தவிர்த்தது, அவருக்கு அரசியல் ரீதியான தோல்வியை தந்தது. அன்று விழுந்தவர் தான் இன்று அவரை அவரால் அரசியல்ரீதியாக எழுந்திருக்க முடியவில்லை, அதுமட்டுமின்றி தான் கடுமையாக விமர்சனம் செய்த திமுகவுடனே கூட்டணியும் வைத்து மக்கள் நம்பிக்கையை சுத்தமாக இழந்தார்.
தற்போது, எடப்பாடி பழனிசாமி அவர்களும் கிட்டத்தட்ட அதே பாதையை பின்பற்றுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிமுகவுக்கு எப்போதும் திமுகதான் இயல்பான எதிரி. எனவே, ஈபிஎஸ்ஸின் முதல் டார்கெட் திமுகவின் தவறுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளாக இருக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக ஈபிஎஸ்ஸின் பெரும்பாலான பேச்சுகள் விஜய்யையும், த.வெ.க.வையும் மையப்படுத்தியே அமைந்துள்ளன. செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்கள் த.வெ.க.வுக்கு சென்ற நிலையிலும், அவர் “திமுகவை வலிமையுடன் எதிர்ப்போம்” என்று பேசி தொண்டர்களின் கவனத்தை திருப்பாமல், த.வெ.க.தான் தனது எதிரி போல் பேசுவது, தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஈபிஎஸ் அவர்கள் திமுகவை விடுத்து விஜய்யை விமர்சிப்பது, அதிமுகவுக்கு பல வழிகளில் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும். முதலாவதாக, ஆளும் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ள வாக்காளர்கள், எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிக்காமல், புதிதாக வரும் ஒரு சிறு கட்சியை விமர்சித்தால், “அதிமுக – த.வெ.க. இடையே தான் சண்டை; இவர்களுக்கு பதில் திமுகவே மேல்” என்று நினைக்க தோன்றலாம். இது திமுகவுக்கு சாதகமாக முடியும். இரண்டாவதாக, ஈபிஎஸ் போன்ற ஒரு மூத்த தலைவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை விமர்சிப்பதன் மூலம், த.வெ.க.வுக்குக் கூடுதல் கவனத்தையும், இலவச விளம்பரத்தையும் வழங்குகிறார்.
மூன்றாவதாக, அதிமுகவின் வாக்கு வங்கியை கவரும் நோக்கில் த.வெ.க. செயல்பட்டாலும், எதிர்க்கட்சியின் பிரதான இலக்கு ஆட்சியில் இருப்பவர்களை வீழ்த்துவதுதான். ஆளும் கட்சியை வீழ்த்தாமல், புதிய கட்சியை இலக்காக வைத்தால், எதிர்க்கட்சி பலவீனமானதாகவே கருதப்படும். இது, அதிமுகவின் அரசியல் இலக்கையே மாற்றியமைத்து, அதன் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமையும்.
மதிமுக தலைவர் வைகோ, ஆரம்பத்தில் செய்த வரலாற்று பிழையை ஈபிஎஸ்ஸும் தொடர்வது, அதிமுகவின் அரசியல் உத்தியில் உள்ள பலவீனத்தை காட்டுகிறது. வரலாறு திரும்பாமல் இருக்க, ஈபிஎஸ் உடனடியாக தனது அரசியல் வியூகத்தை திருத்தி அமைக்க வேண்டும். தனது முழு கவனத்தையும் திமுக அரசின் மீது செலுத்தி, த.வெ.க.வின் மீதான விமர்சனங்களை ஒரு துணை பேச்சாக மட்டுமே வைக்க வேண்டும். இல்லையெனில், ஆளும் கட்சியையும் வீழ்த்த முடியாமல், கட்சி தொண்டர்களையும் இழக்க நேரிடும் ஆபத்து உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
