பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை, வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தல்களுக்கான அரசியல் களத்தின் ஆரம்பமாக அமைந்தது. கோயம்புத்தூரில் நடைபெற்ற மத்திய அரசின் நிகழ்ச்சி, நிர்வாக ரீதியிலான நிகழ்வாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு நகர்வும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே மாறியது.
பிரதமரின் கோவை வருகையின் முக்கிய நிர்வாக நோக்கம், கிசான் சம்மான் நிதி திட்டத்தின் தவணையை விடுவிப்பதாகும். ஒட்டுமொத்தமாக இதுவரை விவசாயிகளுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மட்டும் 18,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
இந்த நிதி பரிமாற்ற நிகழ்வு, மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் நலனில் கொண்டுள்ள அக்கறையை வலியுறுத்துவதாக அமைந்தது. குறிப்பாக, விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் அவர்கள், காவிரி ஆணையத்தை நடைமுறைப்படுத்தியது, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பிரதமரை மேடையில் வெளிப்படையாக பாராட்டியது, குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி, விவசாயிகளுடன் அதிக நேரம் செலவழித்து, சிறுதானியங்கள் மற்றும் நவதானியங்கள் குறித்து கேட்டறிந்து, விவசாய பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதலை ஊக்கப்படுத்தியது, அரசின் விவசாய மீதான முழுமையான ஈடுபாட்டை காட்டுவதாக அமைந்தது.
பிரதமரின் வருகைக்கு முன்னதாக, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான மத்திய அரசின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி பரபரப்பானது. இது தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு அரசியல் பிம்பத்தை உருவாக்க தி.மு.க. அரசால் பயன்படுத்தப்பட்டதாக விவாதத்தில் குறிப்பிடப்பட்டது.
எனினும், இதற்கான காரணம் தொழில்நுட்பப் பிழை என்றும், 20 லட்சம் மக்கள் தொகை என்ற மத்திய அரசின் விதிகளுக்கு ஏற்ப புறநகர் பகுதி மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு மாற்றி அனுப்பும்படி கேட்கப்பட்டுள்ளது என்றும் சி.எம்.ஆர்.எல் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு நிதி வழங்க தயாராக உள்ள நிலையில், மாநில அரசு வேண்டுமென்றே 2011 மக்கள் தொகை கணக்கீட்டை மட்டும் காட்டி, மத்திய அரசின் மீது பழி சுமத்துகிறது என்ற விமர்சனமும் எழுந்தது. உரிய திருத்தங்களை செய்து சமர்ப்பித்தால், திட்டத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்தது.
பிரதமரின் இந்த திடீர் வருகை, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தியது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்று, கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார். இந்த சந்திப்பு, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதாகவும், ஈபிஎஸ் அவர்களுக்கு மத்திய தலைமையின் நம்பிக்கையை மேலும் அளிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஓரங்கட்டப்படுவதாக எழுந்த வதந்திகளுக்கு இந்த சந்திப்பு முற்றுப்புள்ளி வைத்தது. பிரதமர், அண்ணாமலையின் தோளை தட்டி கொடுத்தது, அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியவை, அவர் மத்திய தலைமையின் முழு ஆதரவை பெற்ற ஒரு இளம் தலைவராகவே இன்னும் அண்ணாமலை இருக்கிறார் என்பதை காட்டியது. கோவாவில் நடந்த ஒரு சாகச நிகழ்வில் அவர் கலந்துகொண்டு முடித்ததற்காக, பிரதமர் அவரை இரும்பு மனிதர் என்று அழைத்ததையும், பொதுவெளியில் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. எனவே அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்க இருக்கிறார் என்ற வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.
கோவையில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் துண்டை தலையில் சுற்றியதை கண்ட பிரதமர் மோடி, “பீகார் காற்று இங்கும் வீச தொடங்கிவிட்டதா?” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டது, வரவிருக்கும் தேர்தலை பா.ஜ.க. எவ்வளவு தீவிரமாக கவனிக்கிறது என்பதைக் குறிக்கிறது.
தமிழக அரசியல் களத்தில், பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி வலுவடைந்து, பீகாரை போலவே கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தாரக மந்திரத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. ஈபிஎஸ், அண்ணாமலை, ஜி.கே. வாசன் போன்ற தலைவர்களின் செயல்பாடுகள், கூட்டணியின் ஒருங்கிணைப்பு பலம் குறித்து நம்பிக்கையை அளிக்கிறது. பீகார் மாடல், தமிழ்நாட்டில் எந்தளவுக்கு செயல்படும் என்பதை அடுத்த ஆறு மாதங்கள் முடிவு செய்யும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
