பாகிஸ்தான் வரலாறு காணாத மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை சந்தித்து வருவதாக, அந்நாட்டின் முக்கிய சேவை அமைப்புகளில் ஒன்றான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் எச்சரித்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை காரணமாக பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள படித்த இளைஞர்களின் துயரம் குறித்து பேசிய ஜப்பார் அப்பாஸ், கல்வி முறை மற்றும் பொருளாதாரத்தின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளார். இளைஞர்கள் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 20 லட்சம் வரை செமஸ்டர் கட்டணம் செலுத்தி பட்டம் பெறுகின்றனர்.ஆனால், பட்டம் பெற்ற பின்னர் அவர்களுக்கு வேலை இல்லாமல் இருப்பது அல்லது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை மட்டுமே மாத சம்பளமாகப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர் கேள்வி எழுப்புகையில், “ஒரு இளைஞன் பல வருடங்கள் படித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடக்கூட போதாத சம்பளத்தில் வேலைக்கு சென்றால், அவன் எப்படி மரியாதையுடன் வாழ முடியும்? அவர்களுக்கு என்ன மாதிரியான எதிர்காலத்தை நாங்கள் வழங்குகிறோம்?” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
பொருளாதார நிவாரணத்தை வழங்க அரசு தவறியதை கடுமையாக விமர்சித்த ஜப்பார் அப்பாஸ், இந்த நெருக்கடி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பாதிப்புகளை எடுத்துரைத்தார்: அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்கள், தற்கொலை எண்ணம், திருட்டு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
மருத்துவமனைகளுக்கு வரும் இளைஞர்களில் இரண்டில் ஒருவருக்கு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நம்பிக்கையின்மையே முக்கிய காரணமாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். மாத வருமானம் வெறும் 18,000 முதல் 28,000 ரூபாய் வரையில் மட்டுமே ஈட்டும் சாதாரண குடும்பங்களுக்கு, லட்சக்கணக்கில் மின்சார கட்டணம் வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “மிடில் கிளாஸ் மக்கள் பூமிக்குள் புதைக்கப்பட்டுவிட்டனர்,” என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
மக்கள் தங்கள் நகைகளையும், திருமண சேமிப்புகளையும் விற்று மின் கட்டணத்தையும், பள்ளி கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், மக்கள் பேராசைக்காக அல்ல, பசிக்காக கடைகளை சூறையாடும் நாள் விரைவில் வரும்.
பாகிஸ்தானின் பொருளாதாரச் சீர்குலைவு சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை எந்தளவுக்கு அச்சுறுத்தியுள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
